மாநில செய்திகள்

7-வது சம்பள கமிஷன் சிபாரிசை அமல்படுத்த தமிழக அமைச்சரவை முடிவு; அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு + "||" + Cabinet decision to implement 7th Pay Commission recommendation

7-வது சம்பள கமிஷன் சிபாரிசை அமல்படுத்த தமிழக அமைச்சரவை முடிவு; அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு

7-வது சம்பள கமிஷன் சிபாரிசை அமல்படுத்த தமிழக அமைச்சரவை முடிவு; அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு
7–வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுகளை அமல்படுத்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது.  இதன்படி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரத்து 700–ம், அதிகபட்ச ஊதியமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14 ஆயிரத்து 719 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வை விட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77 ஆயிரம் என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 மற்றும் ரூ.67 ஆயிரத்து 500 என்றும் உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் குறைந்த பட்ச ஊதியம் ரூ.3 ஆயிரம் ஆகவும், அதிக பட்ச ஊதியம் ரூ.11 ஆயிரத்து 100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 16 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6 ஆயிரத்து 703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.

இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14 ஆயிரத்து 719 கோடியை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தலைமை செயலகத்தில் நேற்று காலை 11.25 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. பிற்பகல் 1.30 வரை அமைச்சரவை கூட்டம் நீடித்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.