இரட்டை இலை சின்னம் தினகரன் முட்டுக்கட்டையை முறியடிப்போம் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி


இரட்டை இலை சின்னம் தினகரன் முட்டுக்கட்டையை முறியடிப்போம் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2017 7:38 AM GMT (Updated: 15 Oct 2017 7:38 AM GMT)

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டிடிவி தினகரன் முட்டுக்கட்டையை முறியடிப்போம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிஉள்ளார்.


சென்னை, 

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் நாளைபெற உள்ள விசாரணையில் பங்கேற்பதற்காக அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே விசாரணை நடந்தபோது எங்கள் தரப்பில் வாதங்களை முழுமையாக எடுத்து வைத்தோம்.
இப்போது மறு விசாரணை நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அனைத்து ஆவணங்களையும் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளோம். கூடுதல் ஆவணங்களையும் சட்டப்படி தாக்கல் செய்துள்ளோம்.

எதிர்தரப்பினர் (டி.டி.வி. தினகரன்) எப்படியாவது இந்த விசாரணையை கால தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், விசாரணை நடக்க கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அதை அனைத்தையும் முறியடித்து எங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்து கூறுவோம். முதல்-அமைச்சர், துணை முதல்வர் தலைமையில் அ.தி.மு.க. செயல்படுவதை நிரூபித்து இரட்டை இலையை கண்டிப்பாக பெறுவோம் என்றார். சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பேசுகையில், 

அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அ.தி.மு.க. தொண்டர்கள் அம்மாவின் வழி வந்தவர்கள் இந்த அரசையும், கட்சியையும் காப்பாற்றுவதுதான் கடமை என்று செயல்படுகிறார்கள்.
இப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா. அவர் எதற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ அதன்படி செயல்பட்டு இந்த இயக்கத்தை காப்பது எங்கள் கடமையாகும். இதைத்தான் பொதுமக்களும், கழகத்தினரும் எதிர்பார்க்கிறார்கள் என்றார். 

Next Story