டெங்கு பாதிப்பு: சென்னை ஆஸ்பத்திரியில் மத்திய மந்திரி நேரில் ஆய்வு; மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது


டெங்கு பாதிப்பு:  சென்னை ஆஸ்பத்திரியில் மத்திய மந்திரி நேரில் ஆய்வு; மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது
x
தினத்தந்தி 16 Oct 2017 5:45 AM IST (Updated: 16 Oct 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே நேற்று சென்னை ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

டெங்கு காய்ச்சல் பற்றி ஆய்வு செய்வதற்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் பொது மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய மருத்துவ குழுவினர் கடந்த வெள்ளி கிழமை சென்னை வந்தனர்.

மத்திய குழுவை தொடர்ந்து, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி அஸ்வினி குமார் சவுபே நேற்று சென்னை வந்தார்.  அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலுக்கு தமிழக மருத்துவமனையில் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதல் நிதி வழங்குவது குறித்து ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

2016-2017-ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிதாக 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதில் தமிழகத்தில் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும். இது தொடர்பாக மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கையை பரிசீலித்து 3 மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்படும். 4 மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார்.

எய்ம்ஸ் மருத்துவமனை தரத்திற்கு தமிழக மருத்துவ கல்லூரிகளின் தரத்தை உயர்த்தும் திட்டத்தின் கீழ் மதுரை அரசு மருத்துவ கல்லூரி 85 சதவீதமும், நெல்லை மற்றும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிகள் 35 சதவீதமும், சேலம் அரசு மருத்துவ கல்லூரியை முழுவதுமாகவும் தரம் உயர்த்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. அங்கு தரமான சிகிச்சைகள் வழங்கப்படும். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தரத்திலான அனைத்து துறைகளும் இந்த மருத்துவ கல்லூரிகளில் திறக்கப்படும்.

செங்கல்பட்டில் ரூ.650 கோடி செலவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 3 லட்சம் தடுப்பூசிகள் இந்த வளாகத்தில் தயாரிக்கப்படும். இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாடு முழுவதும் அனுப்பப்படும். 4 மாதத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும்.

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.2,019 கோடி மத்திய அரசால் தமிழக அரசிற்கு வழங்கப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட மந்திரி அஸ்வினி குமார் சவுபே, நேராக அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றார். அவரை, பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், தமிழக அரசு சார்பில் மத்திய குழுவிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் நகலையும் கொடுத்தார். அந்த கோரிக்கை மனுவில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.256 கோடியே 33 லட்சம் ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

Next Story