டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை விஜயகாந்த் குற்றச்சாட்டு


டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை விஜயகாந்த் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Oct 2017 9:45 PM GMT (Updated: 16 Oct 2017 7:14 PM GMT)

விஜயகாந்த், டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவி பொருட்கள் வழங்கிய விஜயகாந்த், டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி பொருட்களை வழங்கி வருகிறார். ஏற்கனவே அவர், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

விஜயகாந்த் நேற்று காலை காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து விஜயகாந்த் நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து ரொட்டி, பழங்கள், கொசு வலை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

அங்கிருந்த டீன் உஷா சதாசிவம், மருத்துவ நிலைய அலுவலர் கந்தன்கருணை ஆகியோரிடம் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது விஜயகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் நன்றாக இல்லை. டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் முழுவதுமாக ஆய்வு செய்யவில்லை. அவர்கள் முந்திரி பருப்பும், காபியும்தான் சாப்பிட்டு சென்றனர்.

மத்திய அரசிடம் கேட்டுள்ள ரூ.256 கோடி நிவாரண நிதி மக்களுக்காக இல்லை. கொள்ளையடிப்பதற்காகவே. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு விஜயகாந்த் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

அப்போது அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன், நகர செயலாளர்கள் ரவி, ரங்கன், ஒன்றிய செயலாளர் எத்திராஜ், மார்க்கெட் பிரகாஷ், கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் எம்.ஜி.மூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.

Next Story