“அனைத்து கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” தா.பாண்டியன் கருத்து


“அனைத்து கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” தா.பாண்டியன் கருத்து
x
தினத்தந்தி 17 Oct 2017 2:45 AM IST (Updated: 17 Oct 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

“பா.ஜ.க. போன்ற பொது எதிரிகளை வீழ்த்த அனைத்து கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்”, என்று தா.பாண்டியன் கூறினார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருப்புக்கொடி போராட்டம்

நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது. சென்னை புழல் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. இவை குறித்து தமிழக அரசு எந்த ஒரு ஆய்வும் செய்யாமல், தனது கடமைகளில் இருந்து தவறுகிறது. தமிழகத்தில் சுகாதார சீர்கேடுகள் நிலவும் சூழலில், மத்திய குழுவினர் வருகையால் எந்த பயனும் ஏற்படப்போவது கிடையாது.

கேரளாவில் பிராமணர் அல்லாத 36 பேரை, கோவில்களில் அர்ச்சகராக்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கேரளா முன்னுதாரணமாகி விட்டது. இதனை தமிழகமும் பின்பற்ற வேண்டும்.

‘கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை மாநிலத்தை விட்டு வெளியேற விட மாட்டோம்’, என மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மிரட்டல் விடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து அவர் அப்படி பேசினால், பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கருப்புக்கொடி காட்டி போராடுவோம்.

ஒன்றிணைய வேண்டும்

பா.ஜ.க. போன்ற பொது எதிரிகளை வீழ்த்த அனைத்து கம்யூனிஸ்டு கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். பல்வேறு கருத்து மோதல்கள் இருப்பதாலயே இந்த இணைப்பில் சிக்கல் நீடிக்கிறது. அதனை களைய முயற்சிப்போம்.

பேரறிவாளனுக்கு 6 மாத காலம் பரோல் வழங்க வேண்டும். இந்த காலத்துக்குள் பேரறிவாளன் உள்பட சிறையில் உள்ள அனைவரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல்-டீசல் விலை தினம் தினம் உயர்ந்து வருகிறது. எனவே மக்கள் பிரச்சினைகளை களைய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான், எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உடன் இருந்தார்.

Next Story