ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் வைகோ அறிவிப்பு


ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் வைகோ அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 6:39 PM GMT (Updated: 17 Oct 2017 6:39 PM GMT)

ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று வைகோ அறிவித்து உள்ளார்.

சென்னை,

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரண தொகை வழங்கக்கோரி ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று வைகோ அறிவித்து உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்’ என்பதற்கு ஏற்ப நடப்பு ஆண்டிலும் பருவ மழையை எதிர்பார்த்து மானாவாரியில் பயிரிட்ட விவசாயிகளுக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாததால் பேரிழப்பிற்கு ஆளாகித் தவிப்பதை கிராமப்புற விவசாயிகளைச் சந்திக்கும்போது அறிய முடிகிறது.

இதனால் விவசாயிகள் மேலும் கடனில் மூழ்கித் தவிக்கும் பரிதாப நிலைதான் உருவாகியுள்ளது. 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் மானாவாரி விவசாயிகள் எவ்வித பயிர்க்காப்பீடு உதவியும் கிடைக்கப் பெறாமல் பெரும் துன்பத்தில் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பல லட்சக்கணக்கான மானாவாரி விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக தங்களின் பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு நிவாரணம் கிடைக்கப்பெறாமல் துன்பத்தில் உழன்று வருகின்றனர்.

தமிழக அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மானாவாரி பயிர் செய்து, வருவாய் இழந்த விவசாயிகளின் வேதனையை உள்வாங்கி, அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிற 2015-16, 2016-17 ஆகிய 2 ஆண்டுகளுக்குரிய பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி நகரில் வருகிற 31-ந்தேதி காலை 10 மணிக்கு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் விவசாயிகளும், ம.தி.மு.க. தோழர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Next Story