தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.5 கோடி வருமானம்! கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை


தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.5 கோடி வருமானம்! கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2017 4:15 AM GMT (Updated: 2017-10-18T09:45:19+05:30)

தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.5 கோடி வருமானம்! கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


தீபாவளி சமயத்தில் எப்படியாவது வீடு போய் சேர்ந்தால் போதும் என்று கிடைத்த பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் பொதுமக்கள். இதனை ஆம்னி பஸ்கள் பயன்படுத்திக்கொண்டு கட்டணக்கொள்ளையில் ஈடுபடுகின்றன. இதனை அரசு அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களால் விழிப்பு உணர்வு அடைந்த மக்கள் உடனுக்குடன் கட்டணக்கொள்கை குறித்து விவரங்களை வெளியிட, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

நேற்று இரவு சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்துகள் நிலையத்தில் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 14 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டது.

இதைத்தவிர, "நேற்றுஇரண்டு பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை விசாரித்து, நான்கு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தாக புகார் தெரிவித்தவர்களுக்குக் கூடுதல் கட்டணத்தை திருப்பிச் செலுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்" தெரிவித்திருக்கிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர். "அதிகக் கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பேருந்துகள் தொடர்பாக 1800 4256 151 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்திருக்கிறார். 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் "இதுவரை நான்கரை லட்சம் பயணிகள் அரசு சிறப்பு பேருந்துகளில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். இதில் ஒன்றரை லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்திருக்கிறார்கள்" என கூறினார்

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தபோது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சர் மெட்ரோ ரயிலில் பயணித்து கோயம்பேடு வந்து இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். இதனை அறிந்த பொதுமக்கள் "விடுமுறை தினங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் போது அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் பொதுமக்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போன்று, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் 5 முக்கிய பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டன. 

இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு மற்றும் வருவாய் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி, தீபாவளி பண்டிகையையட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக 1 லட்சத்து 48 ஆயிரத்து 671 பேர் சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 82 ஆயிரத்து 425 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.4 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.  

இதே போன்று தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக இன்று(புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை 88 ஆயிரத்து 353 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக மட்டும் 84 ஆயிரத்து 48 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story