தவறான கருத்துக்களை பரப்புவதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்


தவறான கருத்துக்களை பரப்புவதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
x

தவறான கருத்துக்களை பரப்புவதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

நிலவேம்பு  கசாயம் தொடர்பாக  நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல்  வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி  முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

அவரது   கருத்துக்கு சென்னை  செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு  அளித்து வரும் நிலவேம்பு கசாயம் நல்ல பலனை அளித்து வருகிறது. அதனை குடித்து யாரும் பக்கவிளைவை சந்திக்கவில்லை. காய்ச்சல், விஷ காய்ச்சல், டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் மிக பெரிய நம்பிக்கையை தரும் மருந்தாக உள்ளது.

நடிகர்  கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் “நிலவேம்பு கசாயம் குறித்து ஆராய்ச்சி முடிவுகள் வரும்வரை இயக்கத்தினர் நிலவேம்பு கசாயம் வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

எனவே  கமலின் டுவிட்டர் பக்கத்தை நீக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழக இறையாண்மைக்கு எதிராகவும், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபராகவும், டெங்கு காய்ச்சலுக்கு அரசு எடுத்து வரும் நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை சொல்லி இருக்கிறார்.

தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் தவறான செயல்களை செய்து வரும் கமலை உடனடியாக கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story