இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 60 சதவீதம் குறைவு ஏ.எம்.விக்ரமராஜா பேட்டி


இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 60 சதவீதம் குறைவு ஏ.எம்.விக்ரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 19 Oct 2017 9:30 PM GMT (Updated: 19 Oct 2017 8:15 PM GMT)

பட்டாசு விற்பனை கடந்த ஆண்டைவிட 60 சதவீதம் குறைந்து உள்ளதாகவும் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை,

உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 2,500 கடைகள் திறக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக பட்டாசு விற்பனை கடந்த ஆண்டைவிட 60 சதவீதம் குறைந்து உள்ளதாகவும் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா இதுகுறித்து கூறியதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. 4 நாட்கள் இடைவெளியில் பட்டாசு விற்பனைக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதே போன்ற நிலை பல மாவட்டங்களில் நிலவியது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 500 பட்டாசு கடைகள் திறக்கப்படவில்லை.

அடுத்த ஆண்டாவது அரசு அதிகாரிகள் இது போன்ற குளறுபடிகள் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்குவதை ஒழுங்குமுறை படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் போது, பட்டாசு மீதான வரி 14 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் பட்டாசு வாங்குவதை தவிர்த்துவிட்டனர்.

பட்டாசு வாங்கியவர்களிலும் 90 சதவீதத்தினர் கடன் அட்டைகள்(கிரெடிட் கார்டு) மூலமாகவே வாங்கி உள்ளனர். இது மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதை காட்டுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையான பட்டாசு இந்த ஆண்டு 60 சதவீதம் குறைந்து ரூ.400 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகி உள்ளது.

இதனால், பட்டாசு விற்பனையில் முதலீடு செய்த வியாபாரிகள் எஞ்சிய பட்டாசுகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர். காரணம் பட்டாசுகளை பாதுகாத்து வைக்க முறையான அனுமதி பெற வேண்டும், பாதுகாப்பு வசதி வேண்டும் அதற்கும் உரிமம் பெற வேண்டும் எனவே இந்த ஆண்டு பட்டாசு விற்பனை செய்த வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுகிறார்கள்.

இவ்வாறு ஏ.எம்.விக்ரமராஜா கூறினார்.

Next Story