சென்னை ராமாவரம் தோட்டத்தில் 24-ந் தேதி கட்சி கொடி ஏற்றம் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு


சென்னை ராமாவரம் தோட்டத்தில் 24-ந் தேதி கட்சி கொடி ஏற்றம் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2017 10:30 PM GMT (Updated: 19 Oct 2017 8:20 PM GMT)

சென்னை ராமாவரம் தோட்டத்தில் 24-ந் தேதி கட்சி கொடி ஏற்றப்படும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராமாவரம் தோட்டத்தில் 24-ந் தேதி கட்சி கொடி ஏற்றம் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

சென்னை,

அ.தி.மு.க.வின் 46-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராமாவரம் தோட்டத்தில் 24-ந் தேதி கட்சி கொடி ஏற்றப்படும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் மேலான ஆணைப்படி, அ.தி.மு.க.வின் 46-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் கட்சியின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தின் நுழைவுவாயிலில் கட்சி கொடி ஏற்றப்படும்.

டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, கட்சியின் 46-வது ஆண்டு தொடக்க நாள் விழா சிறப்பு மலர் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து அந்த பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அறுசுவை உணவும், சீருடையும் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சியின் உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

தங்கள் சுயநலனுக்காக கரம் கோர்த்துக்கொண்ட துரோக கும்பல் தலைமைக்கழகத்தை ஆக்கிரமித்துக்கொண்டு நடத்துகின்ற நிகழ்வுகள், கோடான கோடி தொண்டர்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது. எனினும் பகையை, துரோகத்தை பந்தாடும் பாங்கினை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சசிகலாவின் வழிகாட்டுதலோடு வென்றுகாட்டுவோம்.

விரைவில் இந்த துரோக கும்பலை, சுயநலக்கூட்டத்தை சட்டரீதியாகவே தலைமை கழகத்தில் இருந்து வெளியேற்றிக்காட்டுவோம். துரோகம் என்கிற தற்போதைய களங்கத்தை துடைத்தெறிந்துவிட்டு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கட்சியின் தொடக்க விழாவினை அ.தி.மு.க. என்கிற நமது அடையாளத்தோடு, நம் தலைமை கழகத்தில் எழுச்சியோடு கொண்டாடுவோம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story