ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலகுமா? விசாரணை 25-ந் தேதி தொடங்குகிறது


ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலகுமா? விசாரணை 25-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 Oct 2017 5:45 AM IST (Updated: 21 Oct 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை,

தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் பலன் இன்றி உயிர் இழந்தார்.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட நிலையில், அதில் ஒரு அணிக்கு தலைமை தாங்கிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்தார். பின்னர், அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கிய போதும் ஓ.பன்னீர்செல்வம் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

அதை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஆகஸ்டு 17-ந் தேதி அறிவித்தார்.

அதன்பின்னர், அ.தி.மு.க. இரு அணிகளும் ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி இணைந்தன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 25-9-2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.

அதன்பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் இயங்குவதற்காக எழிலகம் கலச மகால் முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு விசாரணை ஆணையத்திற்காக ஒலி (சப்தம்) ஊடுருவாத அறை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கிடையே, விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கடந்த மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், நேற்று காலை நீதிபதி ஆறுமுகசாமி, எழிலகம் கலச மகாலில் விசாரணை ஆணையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.

எனவே, வரும் 25-ந் தேதி ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, 3 மாதங்களுக் குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

Next Story