டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களிடம் ரூ.11 கோடி அபராதம் வசூல்


டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களிடம் ரூ.11 கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 21 Oct 2017 11:15 PM GMT (Updated: 21 Oct 2017 7:05 PM GMT)

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களில் கலெக்டர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக் கொண்டு உள்ளனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிகம் பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, எந்தெந்த பகுதிகளில் இருந்து அதிகம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை கண்டறிந்த சுகாதாரத் துறையினர், அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தேவையற்ற தண்ணீர் தேங்கும் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும், அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், அந்த மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், தங்கள் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொசு உற்பத்தியை பெருக்கும் வகையில், சுற்றுப்புறங்களை சுகாதாரமற்ற வகையில் வைத்திருந்த வீடு, கடை, நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

அதை மீறும் உரிமையாளர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து உள்ளனர்.

அந்த வகையில் இதுவரை ரூ.11 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் காய்ச்சல் பாதிப்புகளால் தினமும் 160 பேர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இப்போது அது 99 பேர் என்ற அளவுக்கு குறைந்து இருக்கிறது.

மேலும், 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவருக்கு மட்டும்தான் ரத்த கசிவு போன்ற டெங்கு பாதிப்பு அதிகம் இருப்பதாக சோதனையில் தெரியவந்து இருக்கிறது.

Next Story