நேர்முக தேர்வுக்கு அழைப்பு: நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய வாலிபருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை


நேர்முக தேர்வுக்கு அழைப்பு: நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய வாலிபருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2017 3:30 AM IST (Updated: 22 Oct 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

மோசடிகளை வெளியில் கொண்டு வருவதற்காக, நீதிபதிக்கு நேர்முக தேர்வு அழைப்பு கடிதம் அனுப்பிவைத்த வாலிபரை மன்னிப்பு வழங்கி ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.

சென்னை,

மேற்பார்வையாளர் பணிக்கான நேர்முக தேர்வில் கலந்துகொள்ள வரும்படி, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் எஸ்.வைத்தியநாதனுக்கு கடந்த மாதம் தனியார் நிறுவனங்களின் பெயரில் அழைப்பு கடிதங்கள் வந்தன.

இதில், பெரிய நிறுவனங்களின் பெயரை சொல்லி மோசடி நடைபெறுவதாக கருதிய ஐகோர்ட்டு, இதுகுறித்து தாமாக முன்வந்து பொது நல வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது கடிதம் அனுப்பிய திருப்பூர், கோவை, திருச்சியில் இயங்கும் அந்த 5 தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சி.மணிசங்கர், ‘5 தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களும் நம்பகமானவை தான். அவை எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை. தன்னை ஏமாற்றிய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மோசடியை ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பாரதிராஜா என்ற வாலிபர், நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் முகவரியை தவறாக பயன்படுத்தி உள்ளார். அதே நேரம், டெல்லியில் பதிவு பெற்ற வெளிமாநில மோசடி கும்பல் ஒன்று மொபைல் போன் எண்களை பயன்படுத்தி, வேலையில்லா தமிழக பட்டதாரிகளிடம் பணம் பறித்து மோசடி செய்து வருகிறது’ என்று கூறினார்.

இதையடுத்து, கடிதத்தை அனுப்பிய வாலிபர் பாரதிராஜாவையும், அவரது தந்தையையும் நேரில் அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர், மத்திய, மாநில அரசுகளின் முத்திரைகளுடன் போலியான பணி நியமன ஆணைகள் தனக்கு வந்ததாகவும், இந்த மோசடியை ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுவர, இவ்வாறு செயல்பட்டதாகவும் கூறினார்.

அந்த வாலிபரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்ட நீதிபதிகள், அந்த வாலிபரை மன்னித்தும், இதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் செய்யக்கூடாது என்று எச்சரித்தும், அவரை அனுப்பி வைத்தனர். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே நேரம், வாலிபர் பாரதிராஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போலி பணிநியமன ஆணைகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்கு பாரதிராஜாவும், சம்பந்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story