மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? தாம்பரம் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்


மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? தாம்பரம் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:45 AM IST (Updated: 22 Oct 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

தாம்பரம்,

காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தாம்பரத்தில் அ.தி.மு.க. 46-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

1972-ல் எம்.ஜி.ஆரால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. மற்ற கட்சிகளைப்போல குடும்ப அரசியல் அ.தி.மு.க.வில் இல்லை. பல்வேறு தியாகத்தை செய்து இந்த கட்சியை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்து உருவாக்கி இருக்கிறார்கள். உடைந்த கட்சிகள் இணைந்ததாக சரித்திரம் இல்லை. அந்த சரித்திரத்தையே மாற்றி அமைத்தவர் ஜெயலலிதா.

ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள். இந்த இயக்கத்தை அழிக்கவோ சிதைக்கவோ உடைக்கவோ யாராலும் முடியாது.

இந்த ஆட்சி மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என்ற தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டுவரவும், வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறவும் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் எப்படி இணக்கமாக இருந்தார்களோ, அதேபோலத் தான் இணக்கமாக இருக்கிறோம். பா.ஜ.க. மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த தி.மு.க. தற்போது பா.ஜ.க.வை தீண்டத்தகாத கட்சியாக பேசுகிறது. 14 ஆண்டுகள் மத்திய அரசில் இடம்பெற்று மகனுக்கும், பேரனுக்கும் மந்திரி பதவி வாங்கினார்கள். தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

தமிழகத்தில் மக்கள் எதிர்க்கிற மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் உள்பட அனைத்து திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. தமிழகத்திற்கு துரோகம் செய்தது தி.மு.க. தற்போது அ.தி.மு.க. அவைகளை தடுத்துவருகிறது.

96 எம்.எல்.ஏ.க்களை வைத்து 5 ஆண்டுகள் மைனாரிட்டி ஆட்சி நடத்திய தி.மு.க. வினர், எங்களை பார்த்து பெரும்பான்மை இல்லாத ஆட்சி என்கிறார்கள். ஆட்சியில் எந்த குறையும் கூறமுடியாததால் டெங்கு காய்ச்சல் பிரச்சினையை எழுப்பியுள்ளனர். டெங்கு காய்ச்சல் பருவமழை காலங்களில் ஆண்டுதோறும் வருகிறது.

இதை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டந்தோறும் துறை செயலாளர்கள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடும் வறட்சிக்கு பிறகு மழை பெய்துவருகிறது. குடிமராமத்து பணிகளை காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடங்கிய ராசியில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறு மற்றும் ஓடைகளில் தடுப்பணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல் ஆண்டில் ரூ.350 கோடிக்கு தடுப்பணைகள் கட்டப்படவுள்ளது.

கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி 2017-18ம் ஆண்டுக்கு 26 ஆயிரத்து 932 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்கட்டமைப்பு வசதி, கணினி ஆய்வகங்கள், வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு 8 கலைக்கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்பட 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் அரசை குறை சொல்கிறார். முதலில் அவர் பேசுவது மக்களுக்கு புரிந்தால் பதில் சொல்லலாம். மத்தியில் சுகாதார துறை மந்திரியாக இருந்த அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ. வழக்கு உள்ளது. முதலில் உங்கள் முகத்தை பார்த்துவிட்டு எங்கள் மீது குறை சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story