பேரறிவாளன் சிறைவிடுப்பை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பேரறிவாளன் சிறைவிடுப்பை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Oct 2017 1:18 AM IST (Updated: 22 Oct 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளன் சிறைவிடுப்பை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளனின் தாய், தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த குடிமக்களான அவர்களுக்கு கடைசி காலத்தில் உதவவும், உடனிருப்பதற்காகவும் தான் அவருக்கு சிறைவிடுப்பு வழங்கப்பட்டது. பேரறிவாளனின் சிறைவிடுப்புக் காலத்தில் அவரது தந்தைக்கு சிகிச்சை தொடங்கப்பட்டு, சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும், பேரறிவாளனின் தந்தைக்கு இன்னும் நீண்ட காலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தந்தையின் சிகிச்சைகளை தொடரவும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் பேரறிவாளன் உடனிருப்பது உளவியல் அடிப்படையில் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜெயலலிதா இருமுறை அறிவித்த நிலையில், அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களை நிபந்தனையற்ற நீண்டகால சிறை விடுப்பில் விடுவிப்பது தான் முறையாக இருக்கும்.

எனினும் பேரறிவாளனின் தாயார் இந்த வாதங்களையெல்லாம் முன்வைக்காமல், மனித நேயத்தின் அடிப்படையில் பேரறிவாளன் தந்தையார் மற்றும் சகோதரியின் மருத்துவம் தொடருவதற்கு வசதியாக சாதாரண சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும்படி தமிழக முதல்- அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரு மாதமாக சிறைவிடுப்பில் உள்ள பேரறிவாளன் சிறைவிடுப்புக்கான கட்டுப்பாடுகளை சிறிதும் மீறவில்லை. எனவே, அவரது தாயாரின் கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனின் சிறைவிடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story