பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படுமா? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்


பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படுமா? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்
x
தினத்தந்தி 22 Oct 2017 2:00 AM IST (Updated: 22 Oct 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு சம்பந்தமாக எனக்கு தகவல் வரவில்லை. நான் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பிய பின்னர், அது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

சிறைச்சாலைகளில் செல்போன் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும். தேவைப்பட்டால் கிளை சிறைச்சாலைகளிலும் ஜாமர் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மத்திய சிறைச்சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெண் கைதிகள் குறைவாக உள்ளதால், ஊட்டியில் மகளிர் சிறைச்சாலை இயங்குவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story