கியாஸ் கசிவால் தீ விபத்து; 4 பேர் படுகாயம்சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்ப்பு


கியாஸ் கசிவால் தீ விபத்து; 4 பேர் படுகாயம்சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 22 Oct 2017 10:15 PM GMT (Updated: 22 Oct 2017 6:55 PM GMT)

கொடுங்கையூரில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பூர்,

கொடுங்கையூரில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர், 7-வது பிளாக் 175-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடபிரகாஷ் (வயது 55). ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி கீதா (44). இவர்களுக்கு ஷர்மிளா (24) என்ற மகளும், கிஷோர் (20) என்ற மகனும் உள்ளனர்.

ஷர்மிளா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கிஷோர், கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர். அப்போது சிலிண்டர் வால்வை சரியாக மூடவில்லை என்று தெரிகிறது. இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி இருந்தது.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக எழுந்த வெங்கடபிரகாஷ், வீடு முழுவதும் கியாஸ் பரவி இருப்பதை அறியாமல் மின்விளக்கு சுவிட்சை போட்டார். அப்போது பயங்கர சத்தத்துடன் ‘குப்பென்று’ தீப்பிடித்து வீடு முழுவதும் தீ பரவியது.

இதில் வீட்டின் முன்பக்க சுவர், கதவுடன் சேர்ந்து இடிந்து விழுந்தது. அதன் அருகில் உள்ள மாடி படிக்கட்டில் இருந்த இரும்பு கைப்பிடியும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், துணிகள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் வெங்கடபிரகாஷ் மற்றும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த அவருடைய மனைவி கீதா, மகள் ஷர்மிளா, மகன் கிஷோர் ஆகியோர் தீயில் உடல் கருகினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் மற்றும் எழில்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்ல வேளையாக வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் வெடிக்கவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா?, அல்லது வெங்கடபிரகாஷ், திட்டமிட்டு குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.

Next Story