டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 2 ஆஸ்பத்திரி, 2 நூற்பாலைகளுக்கு ரூ.24 லட்சம் அபராதம்


டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 2 ஆஸ்பத்திரி, 2 நூற்பாலைகளுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 22 Oct 2017 9:30 PM GMT (Updated: 22 Oct 2017 7:13 PM GMT)

டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 2 தனியார் ஆஸ்பத்திரி, 2 நூற்பாலைகளுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் நேற்று சேலம் சாரதா கல்லூரி சாலையில், ராமகிருஷ்ணா ரோடு பிரிவு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கீழ்மட்ட தண்ணீர் தொட்டிகளிலும், பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களிலும் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு அபாயகரமான மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஓடையில் கொட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்காமல் இருந்த காரணத்திற்காக ரூ.5 லட்சம், அபாயகரமான மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டினை உருவாக்கியதற்காக ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகிகளிடம் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பான நோட்டீஸ் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டிருந்த 3 குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரி வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படாமல் இருந்ததுடன், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அம்மாபேட்டை மண்டலத்தில் அதிகாரிகள் 2 நூற்பாலைகளில் ஆய்வு செய்தனர். அங்கு எண்ணெய் கேன்கள், தளவாட பொருட்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்ததால் 2 நூற்பாலைகளுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு டீக்கடை தண்ணீர் தொட்டியில் கொசுப்புழுக்கள் இருந்ததால் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரெட்டியூர் பகுதியில் 4 வீடுகளில் கொசுப்புழுக்கள் இருந்ததால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

Next Story