‘மெர்சல்’ படத்தை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில் எப்படி வாழ்வது? கனிமொழி எம்.பி., கேள்வி


‘மெர்சல்’ படத்தை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில் எப்படி வாழ்வது? கனிமொழி எம்.பி., கேள்வி
x
தினத்தந்தி 22 Oct 2017 10:00 PM GMT (Updated: 22 Oct 2017 7:57 PM GMT)

‘மெர்சல்’ படத்தை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில் எப்படி வாழ்வது? என்று கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள சமாஜம் அரங்கில் நேற்று மாலை நடை பெற்றது.

விழாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தலைமை தாங்கி, நூலினை வெளியிட்டார். அதனை எழுத்தாளர் சா.கந்தசாமி, லயோலா கல்லூரி அதிபர் பிரான்சிஸ் ஜெயபதி, காயிதே மில்லத் கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ஜெ.ஹாஜா கனி, திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் சீத்தாராம் யெச்சூரி, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி மா.சுதர்சன நாச்சியப்பன், அ.தி.மு.க. எம்.பி., ஏ.நவநீத கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சீத்தாராம் யெச்சூரி, பேசும்போது, ‘நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் இந்திய மக்களின் பொருளாதாரம், சமூகம், கலாசாரம் ஆகிய சுதந்திரத்துக்காக முன்னணி படைவீரனாக இருப்பேன். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 12 சதவீதம் 1 சதவீதம் பேருக்கே கிடைக்கிறது. 99 சதவீதம் மக்களுக்கான பலன்கள் குறைந்துகொண்டே போகிறது. மக்களுடைய போராட்டங்களை மதரீதியில் மத்திய அரசு திசை திருப்புகிறது. நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சிக்கிறது’ என்றார்.

கனிமொழி எம்.பி., பேசும்போது, மாநில உரிமைகள், மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது. மாநில கட்சிகள் சிதைக்கப்படுகிறது. அடையாளங்கள் அழிக்கப்படுகிறது. எனவே இன்றைய காலகட்டத்தில் சீத்தாராம் யெச்சூரியின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.’ என்றார். அதற்கு பதில் அளித்து டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை, கோட்பாட்டின்படி 2 முறைக்கு மேல் யாரும் எம்.பி.யாக வாய்ப்பளிக்கப்படாது.’ என்றார்.

விழா முடிவில் கனிமொழி எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘மெர்சல்’ படம் சர்ச்சை குறித்து அவரிடம் கேட்டதற்கு, ‘திராவிடர் இயக்கமே திரைப்படத்துறையில் சமூக கருத்துகளை சொல்லி வளர்ந்த இயக்கம் ஆகும். கலை வடிவில் சமுதாய அக்கறையுடன் சொல்லப்படும் கருத்துகளை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில் எப்படி வாழ்வது? கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும்.’ என்றார்.

பின்னர் கனிமொழி எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘இரட்டை இலை’ சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்களே?

பதில்:- இதுபற்றி தேர்தல் கமிஷன் இன்னும் முடிவு எடுக்காதநிலையில், யாருடைய அதிகாரத்தில் இப்படி பேசி வருகிறார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

கேள்வி:- தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட கட்சிகள் கூட்டணி அமைக்குமா?

பதில்:- மக்கள் பிரச்சினைகளுக்காக இன்றைக்கு ஒன்று சேர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது கூட்டணியா மாறுமா? என்பது காலத்தின் கையில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story