காசிமேட்டில் திடீர் மறியல் மீனவர்கள் மீது போலீஸ் தடியடி


காசிமேட்டில் திடீர் மறியல் மீனவர்கள் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 23 Oct 2017 12:08 PM IST (Updated: 23 Oct 2017 12:08 PM IST)
t-max-icont-min-icon

காசிமேட்டில் திடீர் மறியல் மீனவர்கள் மீது போலீஸ் தடியடி 5 பஸ்கள் - 10 வாகனங்கள் உடைக்கப்பட்டது.

ராயபுரம்,

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள் விசைப்படகுகளையும், பைபர் படகுகளையும் பயன்படுத்தி  வருகிறார்கள். 1000 விசைப்படகுகளும், 500 பைபர்படகுகளும் தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

விசைப்படகுகளில் சில மீனவர்கள் அதிக குதிரைத்திறன் கொண்ட சீன என்ஜினை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மற்ற மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

சீன என்ஜின்களை பொருத்தி மீன் பிடிப்பதால் கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும், அதனை பயன்படுத்தாத ஏராளமான மீனவர்களின் தொழிலும் பாதிப்புக்குள்ளாவதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த பிரச்சினையை குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் சீன என்ஜின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் சீன என்ஜின் குறித்து விசாரணை நடத்துவதற்கு மீனவர்கள் சிலரை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர். அவர்கள் மாலை வரையில் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து நேற்று மாலையில் மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்று காலையில் காசிமேடு சிக்னல் அருகில் சூரிய நாராயணா சாலையில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் மீனவர்கள் மறியலை கைவிடவில்லை. இதைத் தொடர்ந்து இணை கமிஷனர் சுதாகர் அங்கு சென்றார். அவரும் பேச்சு நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து ஓடினார்கள். அப்போது
கூட்டத்தில் இருந்து சிலர் கற்களை சரமாரியாக வீசினர்.

இந்த கல்வீச்சில் 5 மாநகர பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ, மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் சேதம் அடைந்தன.

இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பர பரப்பான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

Next Story