கந்து வட்டி கொடுமை: ‘கிட்னி’யை எடுக்க கொண்டு சென்றவர் மீட்கப்பட்டார்
கந்து வட்டி கொடுமையால் ‘கிட்னி’யை எடுக்க கொண்டு சென்றவர் மனைவி கலெக்டரிடம் புகார் கூறியதை அடுத்து மீட்கப்பட்டார்
ஈரோட்டில் கடன்தொகையை திருப்பி செலுத்தாததால், கணவரின் சிறுநீரகத்தை விற்க சொல்லி மிரட்டுவதாக, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், சம்பூரணம் என்பவர் புகார்மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி கொடுமையின் காரணமாக, நேற்று ஒரு குடும்பமே நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளித்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே போன்று ஒரு கொடுமையான சம்பவம் ஈரோட்டிலும் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சூரம்பட்டியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ரவி, கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், ரவியின் சிறுநீரகத்தை விற்க சிலர் முயற்சிப்பதாக அவரது மனைவி சம்பூரணம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்துள்ளார்.
அவரது வேண்டுகோளை உடனே ஏற்றுக்கொண்ட ஈரோடு கலெக்டர் பிரபாகர் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.“ஈரோட்டை சேர்ந்த தொழிலாளி ரவி என்பவரின் கிட்னி தான ஆபரேசன் எர்ணாகுளம் ஆஸ்பத்திரியில் நாளை நடக்க இருப்பதாக தெரிகிறது. அதை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள்” என கேட்டுக் கொண்டார்.
பிறகு ரவியின் மனைவி சம்பூர்ணத்தை ஈரோடு எஸ்.பி ஆபிசுக்கு போய் எஸ்.பி.யிடம் புகார் செய்யுங்கள் நானும் எஸ்.பி.யிடம் பேசுகிறேன் என்று கூறினார்.
உடனே சம்பூர்ணம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்று எஸ்.பி. சிவக்குமாரிடம் மனு கொடுத்தார். அவரும் எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு போனில் தகவல் கொடுத்து ஆபரேஷனை தடுத்து நிறுத்துவதாக உறுதி கூறினார்.
இதனையொட்டி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்ற எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.ஆபரேஷன் நடக்க இருந்த ஆஸ்பத்திரிக்கு தகவல் கூறினர். ஆஸ்பத்திரிக்கு கேரள போலீசார் விரைந்தனர். அங்கு கிட்னி ஆபரேசனுக்காக சேர்க்கப்பட்டிருந்த ஈரோடு தொழிலாளி ரவியை மீட்டனர்.
இன்று மாலை எர்ணாகுளத்தில் இருந்து அவர் ஈரோட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்.
Related Tags :
Next Story