நோய் பரவும் அபாயம்: தேங்கி நிற்கும் மழை நீரால் சென்னை புறநகரில் தொடரும் அவலம்
சென்னை புறநகரில் தேங்கி நிற்கும் மழை நீரால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 31–ந்தேதியில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 6 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் முடிச்சூர், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, வேளச்சேரி, பெருங்குடி, தரமணி போன்ற பகுதிகளில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி உள்ளது.
இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமலும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். பள்ளிக்கரணையில் மேற்கு அண்ணாநகர், ஸ்ரீநகர், மகாத்மா காந்திநகர், லட்சுமி நகர், எல்.ஐ.சி.நகர் போன்ற இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதேபோல், வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி, நேதாஜி நகர், டான்சி நகர், உதயம் நகர் பகுதிகளிலும், மடிப்பாக்கத்தில் ராஜராஜேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், குபேரன் நகர், ராம்நகரிலும் தேங்கிய மழைநீர் வடியாததால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஓட்டேரி, பட்டாளம் போன்ற இடங்களிலும் மழைநீர் வெளியேறாமல் உள்ளது.
சைதாப்பேட்டையில் சலவையர் காலனி, நாகரெட்டி தோட்டம், திருவொற்றியூரில் ராஜாஜி நகர், கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், தண்டையார்ப்பேட்டையில் வ.உ.சி.நகர், பெரம்பூரில் ஜீவா சுரங்கப்பாதை, பெரம்பூர் நெடுஞ்சாலை, சுப்பிரமணியன் தெரு, வியாசர்பாடியில் கல்யாணபுரம், கொரட்டூரில் பாலாஜிநகர், காவியாநகர், கொளத்தூர் ஏரிக்கரை பகுதியை ஒட்டியுள்ள இடங்கள், மயிலாப்பூரில் லஸ் சர்ச் சாலை, மெரினா கடற்கரை போன்ற இடங்களிலும் மழைநீர் தேங்கி இருக்கிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் திருவொற்றியூர், மாதவரம், மணலி, தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பெருங்குடி உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி கிடந்த மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கிய மழை நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கிய நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
சென்னையில் கிண்டி, தியாகராயநகர், அசோக்நகர், வடபழனி, வில்லிவாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, வளசரவாக்கம், அம்பத்தூர், விமானநிலையம், புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் நேற்று மாலை சிறிது நேரம் மழை பெய்தது.
மழைநீர் தொடர்ந்து வடியாமல் குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு தகுந்த நடவடிக்கையை துரிதமாக எடுத்து தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.