தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் -சென்னை வானிலை மையம்


தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் -சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 13 Nov 2017 1:09 PM IST (Updated: 13 Nov 2017 1:09 PM IST)
t-max-icont-min-icon

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால்  வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதனால் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இரவு 8.30 மணி அளவில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. 2 மணி நேரம் இடைவிடாமல் பலத்த மழை பெய்ததால் சாலைகளில்  மீண்டும் வெள்ளம்போல் மழைநீர்  பெருக்கெடுத்து ஓடியது.

இரவு தொடங்கிய மழை அதிகாலை 5 மணி வரை நீடித்தது. விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.

வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம்,  முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது. ஒரேநாள் இரவில் பெய்த மழையால் ஒருசில சாலையில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது.  பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்காமல் வடிந்து விட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கூறியதாவது:-

கடந்த 10 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சற்று வலுப்பெற்று இன்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவி வருகிறது.

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நவம்பர் 13, 14-ம் தேதிகளில் வடதிசையில் நகர்ந்து செல்லும். இதன் காரணமாக நாளை அதாவது 14 தேதி முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையக் கூடும்.

அடுத்த இரு தினங்களைப் பொறுத்தவரை காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சிலமுறை மழை பெய்யும். சில பகுதிகளில் பலத்த மழையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story