5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை; 200 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு?


5 நாட்களாக  நடைபெற்ற வருமான வரி சோதனை; 200 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு?
x
தினத்தந்தி 13 Nov 2017 6:02 PM IST (Updated: 13 Nov 2017 6:02 PM IST)
t-max-icont-min-icon

5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் 200 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை

சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 5-வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரிசோதனை இன்று நிறைவுபெற்றது

சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் 167 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், இன்று  5-வது நாளாக 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

அந்த வகையில், இளவரசியின் மகன் விவேக் இல்லம், தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா இல்லம், ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அங்குள்ள வரவு, செலவு கணக்குகள், போலி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் உள்ளதா? என வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகள் இன்று மாலை  முழுமையாக நிறைவுபெற்றன. மொத்தம் 106 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள்.

மன்னார்குடியில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரிக்க சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சசிகலாவின் உறவினரும் இளவரசியின் மருமகனுமான டாக்டர் சிவகுமார் இன்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்திற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வருகை தந்து விளக்கம் அளித்தார்.

இன்றுடன் ரெய்டை முடித்துக்கொண்ட வருமான வரித்துறையினர்  சசிகலா உறவு வட்டாரங்களை சேர்ந்த சுமார் 200 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்திருப்பதாக  வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வருமான வரிசோதனை முடிந்த பிறகு ஜெயா டிவி சிஇஓ விவேக்கை விசாரணைக்காக வருமானவரித்துறையினர் அழைத்து சென்றனர்.

Next Story