சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் பெரும் அவதி


சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் பெரும் அவதி
x
தினத்தந்தி 14 Nov 2017 3:30 AM IST (Updated: 14 Nov 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சாலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன.

சென்னை,

சென்னையில் மழை என்றாலே அடுத்தடுத்து வரக்கூடிய 2 முக்கிய பிரச்சினைகளில் ஒன்று பள்ளி விடுமுறை. மற்றொன்று போக்குவரத்து நெரிசல். சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்யலாம் என்பதால் சென்னையில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

அதேபோல் நேற்றும் வானில் கரும் மேகங்கள் சூழ்ந்து காலை முதல் பரவலாக மழை பெய்ததால் மாநகர் முழுவதுமே இதமான சூழ்நிலை நிலவியது. மாலை நேரத்தில் குளிரும் அதிகரித்தது.

மேலும் குளிர் நிலவியதால் பலருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் அலுவலகத்தில் இருந்து மாலை 5 மணிக்கே வீடு திரும்பத் தொடங்கினர். பொதுவாக வாரத்தின் முதல் வேலைநாள் என்பதால் திங்கட்கிழமை அன்று சென்னை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதுமட்டுமல்லாமல் நேற்று மாலையிலும் மழை கொட்டியது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

அண்ணா சாலை முதல் ஆலந்தூர் வரையிலான சாலைகள், எல்டாம்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கிரீம்ஸ் சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மிக மந்தமாகவே காணப்பட்டது. கோடம்பாக்கம் ஹைரோடு முதல் வடக்கு உஸ்மான் சாலை வரையிலும், மகாலிங்கபுரம் சாலை, எம்.எம் சாலை, நுங்கம்பாக்கம் ஹைரோடு முதல் கோடம்பாக்கம் சாலை வரையிலும் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து சென்றன.

கதீட்ரல் சாலை, பல்லவன் சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, எழும்பூர் பாந்தியன் சாலை, அசோக் நகர் மெயின் ரோடு, பெசன்ட் நகர் பிரதான சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.


Next Story