வருமானவரி அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்- இளவரசி மகன் விவேக்


வருமானவரி அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்- இளவரசி மகன் விவேக்
x
தினத்தந்தி 14 Nov 2017 11:58 AM IST (Updated: 14 Nov 2017 11:58 AM IST)
t-max-icont-min-icon

வருமானவரி அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள்; அப்போதும் ஒத்துழைப்பு தருவேன் என இளவரசி மகனும் ஜெயா டிவி தலைமை செயலதிகாரியுமான விவேக் கூறினார்.

சென்னை

சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் அவர்கள் சோதனை நடத்தினார்கள். 187 இடங்களில் 1,600-க்கும் அதிகமான அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்துவிட்ட நிலையில், சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், அதன் தலைமை செயல் அதிகாரியும், சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அலுவலகம், அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு, சென்னையை அடுத்த படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களில் நேற்று 5-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

விவேக் வீட்டில் சோதனை நடத்திய போது, விவேக், அவருடைய மனைவி கீர்த்தனா மற்றும் மைத்துனர் பிரபு ஆகியோரை தனித்தனியாக அறையில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் ஒரு பெண் அதிகாரி உள்பட 4 அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாலை 5.10 மணி வரை விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்தது. இதையடுத்து மேல் விசாரணை நடத்துவதற்காக விவேக் மற்றும் அவருடைய மைத்துனர் பிரபுவை 5.15 மணி அளவில் மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம் மற்றும் விவேக் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், வருமான வரி அலுவலகத்தில் விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை நேற்று இரவு 10 மணி வரை நீடித்தது. அதன் பிறகு விவேக் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இளவரசியின் மகனும் ஜெயா டிவி தலைமை செயலதிகாரியுமான விவேக் இன்று இது குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜெயா டிவி, ஜாஸ் சினிமா நிர்வாகத்தை கடந்த 2 வருடங்களாக பார்த்து வருகிறேன். ஜெயா டிவி, ஜாஸ் சினிமா வருவாய் குறித்து கணக்கு கேட்டனர்; கொடுத்தேன்

வருமான வரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். எனது வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட மனைவியின் நகைகள் குறித்து கணக்குகள் என்னிடம் உள்ளது, அதனை வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பேன்.

வருமானவரி அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள்; அப்போதும் ஒத்துழைப்பு தருவேன். எனது திருமணத்தின் போது மனைவிக்கு போடப்பட்ட நகைகள் குறித்து கேட்டனர்; எனது மனைவியின் நகைகளுக்கு உரிய ஆவணங்களை வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story