கவுரவம் சேர்க்கும் தேசிய பத்திரிகையாளர் தினத்துக்கு முதல்–அமைச்சர் வாழ்த்து
தேசிய பத்திரிகையாளர் தினத்துக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்துப் பேசினார். அப்போது அவர்களுக்கு, முதல்–அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறிய வாழ்த்து வருமாறு:–
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிகைத் துறை, செய்திகளை உள்ளது உள்ளபடி நடுநிலையோடு மக்களுக்கு தெரிவிப்பதோடு, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசென்று மக்களுக்கும் அரசிற்கும் பாலமாக திகழ்ந்து வருகிறது.
இத்தகைய பெருமைமிக்க பத்திரிகை துறையின் விழிகளாகவும் செவிகளாகவும் திகழும் பத்திரிகையாளர்களின் பணியை கவுரவிக்கும் இந்த தேசிய பத்திரிகையாளர் தின நன்னாளில், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இனிய நாளில், ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பத்திரிகையாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ உதவி போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமுதாயத்தின் நலனுக்காக செய்திகளை மக்களுக்கு அளிக்கும் பத்திரிகையாளர் நண்பர்களை இத்தருணத்தில் பாராட்டி, அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.