தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்: 90 பேர் கைது


தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்: 90 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2017 4:15 AM IST (Updated: 17 Nov 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வெளிமாநில ஆசிரியர்கள் நியமிப்பதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1050 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதையொட்டி அந்த பணியிடங்களை நிரப்ப சென்னை டி.பி.ஐ.யில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தி கடந்த 7–ந் தேதி முடிவை வெளியிட்டது. அந்த முடிவில் 100 பேர் தமிழகம் அல்லாது பிற மாநிலத்தவர்கள் இருந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களை பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் எனவும், தமிழர்களை மட்டும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் நேற்று காலையில் மறியல் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை அங்கு செல்லவிடாமல் போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக அண்ணாபல்கலைக்கழகத்திற்கும், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கும் இடையே மெயின் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வுவாரியம் தேர்வு நடத்தி முடிவை அறிவித்தது. தேர்வுமுடிவில் பிற மாநிலத்தவர்கள் சர்மா, ராவ் என்று 100–க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை தவிர பிற மாநிலத்தவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவு. எனவே தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் நியமனத்தில் வெளி மாநிலத்தவர்களை ரத்து செய்துவிட்டு தமிழர்களை தேர்வு செய்து அறிவிக்கவேண்டும். அவ்வாறு செய்யாவிடில் 23–ந் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்படும் இடத்தில் மறியல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கோவை கு.ராமகிருஷ்ணன் கூறினார்.

பின்னர் கு.ராமகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் ஆரிச்சாமி, சென்னை மாவட்ட செயலாளர் குமரன் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மொத்தம் 90 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story