தி.மு.க.வுடன் சேர்ந்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி


தி.மு.க.வுடன் சேர்ந்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி
x
தினத்தந்தி 17 Nov 2017 4:16 AM IST (Updated: 17 Nov 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க. அரசை கவிழ்க்க டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் முயற்சிப்பதாக ஐகோர்ட்டில் முதல்–அமைச்சர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

சென்னை,

முதல்–அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்த, அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர்.

அதேபோல, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான குட்காவை சட்டசபைக்குள் கொண்டு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுபோல, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்யக்கோரியும், சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று மொத்தம் 7 வழக்குகள் ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, இந்த 7 வழக்குகளும் சபாநாயகரின் அதிகாரம் தொடர்பானது. எனவே, இந்த வழக்குகளை 2 நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தால்தான் சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

இதன்படி இந்த 7 வழக்குகளும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது வக்கீல் ரவி என்பவர் எழுந்து, ‘கடந்த பிப்ரவரி 18–ந் தேதி சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டு பதிவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை முதலில் விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் எழுந்து, ‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டசபைக்குள் கொண்டுவந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு இந்த ஐகோர்ட்டு தடைவிதித்துள்ளது. இதனால், உரிமைக்குழு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே, இந்த தடையை நீக்கும்விதமாக, இந்த வழக்கை முதலில் விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சார்பில் ஆஜரான டெல்லி மூத்த வக்கீல் அபிஷேக் சிங்கி எழுந்து, ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தபோது, நான் வாதம் செய்தேன். அந்த வாதத்தை தொடர அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்ததும், அவர் வாதத்தை தொடங்கினார்.

‘முதல்–அமைச்சர் பழனிசாமிக்கு எதிராகத்தான் கவர்னரிடம் 18 எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர். அரசுக்கோ, கட்சிக்கோ எதிராக அவர்கள் செயல்படவில்லை. கவர்னரிடம் மனு கொடுத்ததும், ‘ராக்கெட்’ வேகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, அரசு தலைமை கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று புகார் செய்தும், இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. எனவே, 18 எம்.எல்.ஏ.க்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது’ என்று வாதிட்டார்.

மேலும், ‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால், அப்பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் 18 பேரும் கோரிக்கை விடுத்தனர். முதல்–அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர, வேறு யாரை நிறுத்தினாலும், அவர்களுக்கு ஆதரவாக இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போடுவார்கள்’ என்றும் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட முதல்–அமைச்சர் பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் வைத்தியநாதன், ‘தி.மு.க.வு.டன் கூட்டணி சேர்ந்து, அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து வாக்களித்து, அ.தி.மு.க. அரசைக் கவிழ்க்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்படுகின்றனர். இதற்காகத்தான் இந்த தகுதி நீக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டை நாடியுள்ளனர்’ என்றார்.

அதற்கு அபிஷேக் சிங்கி, ‘தி.மு.க. பக்கம் சாயவேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்களும் நினைக்கவில்லை. முதல்–அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றவேண்டும் என்று தான் அவர்கள் முறையிடுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடரவேண்டும் என்பதில் 18 எம்.எல்.ஏ.க்களும் உறுதியாக உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து கோர்ட்டு பணி நேரம் முடிவடைந்ததால், விசாரணையை வருகிற 20–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Next Story