ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றியது என்ன? வருமானவரி அதிகாரி விளக்கம்


ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றியது என்ன? வருமானவரி அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 22 Nov 2017 5:30 AM IST (Updated: 22 Nov 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றியது என்ன? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை

சோதனையின்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றியது என்ன? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர்காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சசிகலாவின் குடும்பத்தினர் ஆஜராகி அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளித்தும், உரிய ஆவணங்களை அளித்தும் செல்கின்றனர்.

இந்தநிலையில் அங்கு பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவரை, பத்திரிகையாளர்கள் நேற்று சந்தித்து வருமான வரிசோதனை குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தார். அவர், தன்னுடைய பெயரையும், வகிக்கும் பதவியையும் கூற மறுத்துவிட்டார்.

நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சசிகலா குடும்பத்தினரிடம் சோதனை நடத்தியதில் உள்நோக்கம் உள்ளதா?

பதில்:- எந்த உள்நோக்கமும் கிடையாது. பொருளாதார உளவு பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நடத்தி வரும் நிறுவனங்கள் பல மாதங்களாக வரி ஏய்ப்பு செய்வதை ரகசியமாக கண்காணித்து வந்தோம்.

உறுதியான தகவல்கள் கிடைத்ததால், சசிகலா குடும்பத்தினர் நடத்தி வரும் நிறுவனங்களில் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடத்தினோம்.

கேள்வி:- தற்போது நடந்த வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் எவ்வளவு?

பதில்:- 187 இடங்களில் நடந்த சோதனையின் போது ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பில் தங்க நகைகள், ரூ.1,430 கோடி மதிப்பில் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர 70-க்கும் அதிகமான போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றின் மூலம் கோடிக் கணக்கான பணம் பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பல இடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள இடங்களை படிப்படியாக திறந்து சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

கேள்வி:- போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் என்ன? என்ன? பொருட்கள் கைப்பற்றப்பட்டன?

பதில்:- மறைந்த ஜெயலலிதா வீட்டில் ஆவணங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினோம். அங்கு சசிகலா பயன்படுத்தி வந்த 4 அறைகள் மற்றும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனின் அறை உள்பட 5 அறைகளில் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று சோதனை நடத்தினோம். இந்த சோதனையில் 1 லேப்-டாப், 2 செல்போன் டேப், மற்றும் ஏராளமான பென்டிரைவ்கள் கைப்பற்றினோம். இதுதவிர ஒரு சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம்.

கேள்வி:- போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மூலம் வரிஏய்ப்பு குறித்து ஏதாவது துப்பு கிடைத்துள்ளதா?

பதில்:- போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட லேப்-டாப், செல்போன் டேப் மற்றும் பென்டிரைவ்கள் உள்பட மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் சசிகலா உறவினர்கள் நடத்தி வந்த போலி நிறுவனங்களின் குறியீட்டு எண்கள் (டின் நம்பர்) கிடைத்தன. அவற்றின் மூலம் நடத்தப்பட்ட பணபரிவர்த்தனை விவரங்கள் தெரியவந்துள்ளது. அவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

போயஸ் கார்டனில் உள்ள அறைகளின் சாவியை, இளவரசியின் மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடம் இருந்து பெற்றோம்.

கேள்வி:- இந்த சோதனையையொட்டி எவ்வளவு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது?

பதில்:- சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்பதற் காக சசிகலா குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். அவர்களும், பல நிறுவனங்களை நடத்தி வருவதால், நாங்கள் கேட்கும் தகவல்களை எங்களிடம் அளித்து வருகிறார்கள்.

கேள்வி:- அடுத்த கட்ட விசாரணை எந்த அளவில் இருக்கும்?

பதில்:- தேவைப்படும் பட்சத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் நீதிமன்ற உத்தரவை பெற்று விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

கேள்வி:- சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையில், குறிப்பாக பினாமிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் யார்? யார்?

பதில்:- முன்பெல்லாம் வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள் மற்றும் நண்பர்களை தான் பினாமிகளாக நியமிப்பார்கள். ஆனால் தற்போது பெரிய பணக்காரர்களே பினாமிகளாக இருந்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தில் யார்? யார் பினாமிகளாக இருக்கின்றனர்? அவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள்? அவர்களுக்கு எங்கெல்லாம் சொத்துகள் இருக்கிறது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கண்டுபிடிக்கப்பட்ட உடன் பினாமி சட்டத்தின் படி அவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கேள்வி:- அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய போது துணை ராணுவத்தினர் அழைக்கப்பட்டிருந்தனர், ஆனால் தற்போது ஏன் துணை ராணுவத்தினர் அழைக்கப்படவில்லை?

கேள்வி:- சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்துவது வழக்கம். வடமாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் துணை ராணுவத்தினர் பலர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் மாநில போலீசார் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி பாதுகாப்பு அளித்து வருவதால் துணை ராணுவத்தினர் தற்போது அழைக்கப்படவில்லை.

கேள்வி:- அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை தற்போது எந்த நிலையில் உள்ளது?

பதில்:- முதல்கட்ட சோதனை முடிவடைந்து உள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் அவருடைய சொத்துகளின் மதிப்பு மதிப்பிடப்பட்டு உள்ளது. எந்த வருமானவரி சோதனை முடிவுகளும் சோதனை முடிந்து உடனடியாக முடிவு தெரிவதில்லை. இதுபோன்ற வழக்குகளை முடிக்க 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டத்திலேயே கூறப்பட்டு உள்ளது.

கேள்வி:- வெளிநாடுகளில் உள்ள சசிகலாவின் சொத்துகள் குறித்து விசாரணை செய்யப்படுமா?

பதில்:- சசிகலாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் இருப்பது குறித்து நீங்கள் (பத்திரிகையாளர்களுக்கு) உள்பட யார் வேண்டுமானாலும் ஆதாரபூர்வமாக தெரிவிக்கலாம். உறுதி செய்யப்பட்டால் சோதனை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கேள்வி:- வருமானவரி ஏய்ப்பு குறித்து விசாரணை உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- கைது செய்யும் அதிகாரம் நீதிமன்ற உத்தரவை ஏற்று செயல்படுத்தப்படும்.

கேள்வி:- வருமானவரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது?

பதில்:- கருப்புபண நடவடிக்கை மற்றும் பணபரிவர்த்தனையில் மோசடிகள் தெரியவந்தால் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் நீதிமன்றம் தான் இதுகுறித்து இறுதி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story