தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி


தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி
x
தினத்தந்தி 21 Nov 2017 10:30 PM GMT (Updated: 21 Nov 2017 8:26 PM GMT)

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 100 பேரை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் அரசு பள்ளியில் ரூ.2 கோடியே 73 லட்சம் செலவில் புதிய கட்டிடங்களை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர், அனகாபுத்தூர் அரசு பள்ளி மற்றும் பல்லாவரம் தெரசா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின்பு கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய திட்டங்கள் செயல் படுத்தபட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மாணவர்களில் சிறந்த கல்வியாளர்களை தேர்ந்தெடுத்து மேலை நாடுகளுக்கு பயிற்சி அளிக்க 100 மாணவ-மாணவிகளை தேர்வு செய்ய இருக்கிறோம்.

நார்வே, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக 25 மாணவ-மாணவிகள் கொண்ட 4 குழுக்களாக இவர்கள் பிரிக்கப்படுவார்கள். அந்த நாடுகளில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காகவும் இந்த நாடுகளை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் அவர்கள் அனுப்பப்பட இருக்கின்றனர். இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்படும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது.

அதேபோல் தமிழ் மொழிக் கல்வியில் படிக்கிற மாணவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ்-1 மாணவர்கள் 15 பேரும், உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 15 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-1 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ஊக்கத் தொகை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அந்த தொகையை ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி அன்று வழங்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story