சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ.1,450 கோடி செல்லாத நோட்டுகள் வந்தது


சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ.1,450 கோடி செல்லாத நோட்டுகள் வந்தது
x
தினத்தந்தி 22 Nov 2017 2:00 AM IST (Updated: 22 Nov 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ.1,450 கோடி செல்லாத நோட்டுகள் வந்தது

சென்னை,

நெல்லையில் இருந்து ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ.1,450 கோடி செல்லாத நோட்டுகள் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. இதையடுத்து அந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் வங்கிகளில் சேகரிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மொத்தமாக சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கோவில்பட்டி பகுதிகளில் உள்ள வங்கிகளில் ரூ.1,450 கோடிக்கு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டிருந்தது. அந்த பணம் அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வரும் ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று முன்தினம் இரவு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தவுடன், அந்த ரெயிலில் ரூ.1,450 கோடி செல்லாத நோட்டுகளுடன் தனி பெட்டி இணைக்கப்பட்டது.

அந்த பெட்டியில் ஒரு உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 13 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். செந்தூர் ரெயில் நேற்று காலை 11.30 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தது.

ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.1,450 கோடி செல்லாத நோட்டுகள் 3 லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

ரிசர்வ் வங்கி கைக்கு கிடைத்த அந்த பணம் சில தினங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நாசிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அழிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Next Story