கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி


கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 22 Nov 2017 10:00 PM GMT (Updated: 22 Nov 2017 7:08 PM GMT)

தேனி அருகே கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

தேனி,

தேனி அருகே கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்றவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46), கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சுகதா (40). இவர்களுக்கு வைஷ்ணவி (16), வைசாலி (14) என்ற இரு மகள்கள் உள்ளனர். சரவணன் ஒருவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. வட்டிக்கு பணம் கொடுத்தவர், ஆட்களுடன் வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால், மனம் உடைந்த சரவணன், சுகதா ஆகியோர் நேற்று காலை விஷம் குடித்தனர்.

பின்னர் தங்களின் மகள்களுக்கும் விஷம் கொடுத்தனர். அப்போது தற்செயலாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று சுகதாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது கணவர், போடி சிலமலையை சேர்ந்த சுருளிராஜன் என்பவரிடம் வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். இதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வரை திருப்பிக்கொடுத்து விட்டோம். கொடுத்த தொகையை வட்டிக்கு கழித்து விட்டதாகவும், இன்னும் ரூ.2 லட்சம் தரவேண்டும் என்றும் சுருளிராஜன் கூறினார்.இந்த நிலையில் அவர், அதே பகுதியை சேர்ந்த செல்வம், லட்சுமணன் (42), முத்துராமலிங்கம், சங்கரநாராயணன், காளியப்பன் (52) ஆகியோருடன் எங்களது வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர்கள் தரக்குறைவாக பேசி, சாதியை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே சரவணனின் உறவினர்கள் சுமார் 50 பேர், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சுகதா அளித்த புகாரின் அடிப்படையில் சுருளிராஜன், செல்வம், லட்சுமணன், முத்துராமலிங்கம், சங்கரநாராயணன், காளியப்பன் ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லட்சுமணன், காளியப்பன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

Next Story