எதிர்க்கட்சியினர் மக்களுக்காக உழைக்க தொடங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி


எதிர்க்கட்சியினர் மக்களுக்காக உழைக்க தொடங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 22 Nov 2017 10:15 PM GMT (Updated: 22 Nov 2017 7:33 PM GMT)

எதிர்க்கட்சியினர் மக்களுக்காக உழைக்க தொடங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி

வெற்று அறிக்கைகளை வெளியிடுவதை விட்டு விட்டு எதிர்க்கட்சியினர் மக்களுக்காக உழைக்க தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனவுடன் தூத்துக்குடி மக்களை சந்திக்க விரும்பினார். தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கூட்டத்திற்கு வருகை தந்தார். எம்.ஜி.ஆரின் பேச்சை கேட்பதற்கும், அவரை நேரில் பார்ப்பதற்கும் கூட்டம் பெருங்கடலென அலை மோதியது. எல்லோருக்கும் மைதானத்தில் இடம் இல்லை. என்ற நிலை ஏற்பட்டது. பலர் மைதானத்தின் சுற்றுச்சுவருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டார்கள்.

வெளியூரிலிருந்து வந்த பல தாய்மார்கள் காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி மைதானத்தின் சுவர்மீது ஏறிக்குதித்து மைதானத்திற்குள் நுழைந்தார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் காவலர்கள் லத்தியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதைத்தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ஒலிபெருக்கி மூலம் அறிவித்து காவலர்களிடமிருந்த லத்திகள் அனைத்தையும் மேடைக்கு கொண்டு வரச் செய்தார். நிகழ்ச்சி முடியும் வரை லத்திகளை காவலர்களிடம் ஒப்படைக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்து எம்.ஜி.ஆர்., அவர்கள் தாய்மார்களைப் பார்த்து அன்போடு கையசைத்துவிட்டு காரில் ஏறிய பிறகுதான் லத்திகள் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

1962-ம் வருடம், எம்.ஜி.ஆர். படப்பிடிப்பிற்காக பெங்களூர் அருகில் காரில் தன் உதவியாளர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். கிராமப்பகுதியில் ஒரு ரெயில்வே கேட்டில் வண்டி நின்றது. ரெயில்வே கேட் திறக்கப்படும் வரை எம்.ஜி.ஆர். காரில் காத்துக் கொண்டிருந்த நிலையில் எம்.ஜி.ஆரை அந்த கிராமத்து மக்கள் பார்த்து விட்டார்கள். சாலை ஓரத்திலிருந்த ஒரு குடிசையிலிருந்த மூதாட்டி காருக்கு அருகில் வந்து, எம்.ஜி.ஆரை தன் குடிசைக்கு வரவேண்டும் என்று அழைத்தார். மூதாட்டியின் அன்புக்காக எம்.ஜி.ஆர். காரிலிருந்து இறங்கி மூதாட்டியின் குடிசைக்கு சென்றார். கூடவே உதவியாளர்களும் தொடர்ந்தார்கள்,

அய்யா, நீங்க எங்க குடிசைக்கு வருவதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ? சூடா பசும்பால் இருக்கிறது கொஞ்சம் சாப்பிடுங்க அய்யா என்ற வேண்டுகோளுடன் பசும் பாலை எடுக்க ஓடினாள். பசும்பாலை ஆற்றிக் கொடுத்த போது அதை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் முதலில் வாங்கி குடித்து பார்த்தார்கள். பிறகு தான் எம்.ஜி.ஆரிடம் குடிக்க கொடுத்தார்கள். பிறகு ரெயில்வே கேட் திறந்ததும் வண்டி புறப்பட்டது.

காரில் அமர்ந்ததும், உதவியாளரிடம், தம்பி உனக்கு ரொம்ப பசியா? பசும் பாலை பிடுங்கி முதலில் குடித்தாயே என்று எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அந்த உதவியாளரிடம் கேட்டார். யார் எதைக் கொடுத்தாலும் குடித்து விடுகிறீர்கள். அவங்க ஏதாவது கலந்து கொடுத்திருந்தால் என்ன ஆவது. அதனால்தான் நாங்கள் குடித்து பார்த்தோம் மன்னிச்சிடுங்க அய்யா என்றார் அந்த உதவியாளர்.

இதைக் கேட்டதும் கோபமடைந்த எம்.ஜி.ஆர்., மூதாட்டி எனக்கு ஏன் விஷம் கொடுக்க வேண்டும், ஒரு நல்ல தலைவனுக்கு அஸ்திவாரம் என்ன தெரியுமா? மக்கள் நம் பேரில் வைத்திருக்கின்ற மதிப்பும், நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் தான் என்றார். இந்த உணர்வு தான் தலைவர் மறைந்து 30 வருடங்கள் கழித்தும் அத்தகைய மாபெரும் தலைவரை நாம் அனைவரும் மறவாமல் நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அல்லும் பகலும் ஓய்வில்லாமல் உழைத்து மாவட்டங்கள் தோறும் பலகோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அறிவித்தும் வருவதை தமிழ் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

வேகமாகச் சுழலும் வண்டிச் சக்கரங்கள் சுழலாதது போல் தான் தெரியும். எங்கள் உழைப்பையும், நாட்டின் வளர்ச்சியையும் கண்டாவது எதிர்க்கட்சியினர் வெற்று அறிக்கைகளை வெளியிடுவதை விட்டு விட்டு, மக்களுக்காக உழைக்கத் தொடங்குங்கள்.

சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் பேசுகிறார், வேடிக்கையாக இருக்கிறது. தமிழகம் இன்றைக்கு அமைதிப்பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடு என்பது மக்களுக்குத் தெரியும்.

ஆனால் இவர்கள் நினைத்தார்கள், ஜெயலலிதா மறைந்துவிட்டார், இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும், இந்த கட்சி உடைந்துவிடும் என்றெல்லாம் எண்ணினார்கள். ஆனால் அது ஒன்றுமே நடக்கவில்லை. அதனால் தினந்தோறும் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள், பத்திரிகைகளில் எல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழாவிலே நான் ஒரு கருத்தைச் சொன்னேன். நானும், துணை முதல்-அமைச்சரும் இரட்டைக்குழல் துப்பாக்கியைப் போல் செயல்படுவோம் என்று ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்ற கருத்தை நான் வலியுறுத்திச் சொன்னேன், இவர்களுக்கு என்ன கோபம் வருகின்றது என்றுதான் தெரியவில்லை. அருகில் இருக்கின்ற நெல்லை மாவட்டத்திலே எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசுகின்றபொழுது இதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றார். எந்த அளவுக்கு மனக்குமுறல் இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய கருத்தைச் சொல்கின்றோம், இவருக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது?.

முட்டை வழங்குவதை நிறுத்தவில்லை

முட்டைவிலை உயர்ந்த காரணத்தினாலே, முட்டை சாப்பிடுகின்ற சத்துணவு குழந்தைகளுக்கு முட்டை வழங்கவில்லை என்ற கருத்தை மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கின்றார். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

ஜெயலலிதா அரசு ஏழை, எளிய மக்களை காக்கக்கூடிய அரசு, அந்த ஏழை, எளிய மக்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு முட்டையை ஒருபோதும் தடுத்து நிறுத்த மாட்டோம், எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல், அந்த குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம் என்ற கருத்தை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்கிறேன். அவர் கருத்து தவறானது, வேண்டுமென்றே இந்த அரசின் மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story