ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 24 Nov 2017 10:45 PM GMT (Updated: 24 Nov 2017 6:34 PM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தலில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

ஏற்கனவே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தபோது பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட கங்கை அமரன் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டார். பா.ஜனதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்து விட்டதாகவும் அந்த கட்சியினர் அறிவித்தனர்.

இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் பா.ஜனதாவுக்கு தேர்தல் வேலை செய்ய தயாரானார்கள். அப்போது யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போதும் ரஜினிகாந்த் ஆதரவை பெறுவதில் பா.ஜனதா ஆர்வம் காட்டுகிறது. நடுநிலை வகிப்பாரா? ஆதரவு தெரிவிப்பாரா? என்பது குறித்து ரசிகர்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் கட்சி தொடங்கும் வேலையில் இருப்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவாரா? போட்டியிடாமல் நடுநிலை வகிப்பாரா? அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசி இருக்கிறார். தி.மு.க. மீதும் அவர் விமர்சனங்கள் வைக்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம். அல்லது தி.மு.க. பக்கம் சாயலாம் என்று விவாதங்கள் நடக்கின்றன.

ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Next Story