ஆர்.கே.நகரில் 5 முனை போட்டி உருவாகிறது போட்டியிடுவது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


ஆர்.கே.நகரில் 5 முனை போட்டி உருவாகிறது போட்டியிடுவது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 25 Nov 2017 2:45 AM IST (Updated: 25 Nov 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதியில் 5 முனை போட்டி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் 5 முனை போட்டி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

பிரதான கட்சியான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் ஆர்.கே.நகரில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் ஆகியோர், வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஆட்சி மன்ற குழு முடிவு செய்யும் என்று தெரிவித்தனர். ஆர்.கே.நகரில் கடந்த முறை ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிட்ட அவைத்தலைவர் மதுசூதனன் கூறும்போது, ‘ஆர்.கே.நகரில் மீண்டும் நான் போட்டியிடுகிறேனா? அல்லது வேறு யாராவது போட்டியிடுகிறார்களா? என்பது குறித்து தலைமைக்கழகம் தான் முடிவு செய்யும்’ என்றார்.

தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது குறித்து கனிமொழி எம்.பி. கூறும்போது, ‘ஆர்.கே.நகரில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்’ என்றார். தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று டி.டி.வி.தினகரன் திருப்பூரில் நிருபர்களிடம் பேசும்போது கூறினார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, பா.ஜ.க. வேட்பாளர் குறித்து தேர்தல் பணிக்குழு முடிவெடுக்கும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்பது யூகத்தின் அடிப்படையிலானது என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து ஓரிரு நாளில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கருத்து குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மாநிலக்குழு ஆலோசித்து முடிவு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன் அணி, பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் நிற்பது உறுதியாகி உள்ளது. கடந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்த தே.மு.தி.க. இந்த முறை போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்து விட்டது. இதனை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உறுதி செய்துள்ளார்.

பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் ஆர்.கே.நகரில் 5 முனை போட்டி உறுதியாகி உள்ளது.


Next Story