கடலூர் மாவட்ட மீனவர்களின் கதி என்ன? விவசாயிகள் கவலை


கடலூர் மாவட்ட மீனவர்களின் கதி என்ன? விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 4 Dec 2017 5:00 AM IST (Updated: 4 Dec 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் சிக்கிய கடலூர் மாவட்ட மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை, மழை வெள்ளத்தில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்ட மீனவர்கள் தினக்கூலி அடிப்படையில் மீன்பிடி தொழிலுக்காக கேரளா சென்று, அங்கிருந்து கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். இதேபோல் 10 நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஒகி புயலில் சிக்கினர். இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் மீனவ கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இதனிடையே, ஒகி புயலில் சிக்கிய கடலூர் மாவட்ட மீனவர்கள் 8 பேர் பத்திரமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மீதமுள்ள 13 மீனவர்களின் கதி என்ன? என்பது பற்றி தகவல் கேட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. காட்டுமன்னார்கோவிலில் மழைக்கு 44 வீடுகள் சேதமடைந்தன. பசுமாடு, 3 கன்றுகுட்டிகள் உயிரிழந்தன. மணவாய்க்கால் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீரநத்தம்நெடுங்கூர்-விளங்கல் சாலையை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருத்தாசலம் பகுதியில் 2,500 ஏக்கர் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் மழைவெள்ளத்தில் மூழ்கின. பெண்ணாடம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே செல்லும் குமந்தான் மேடு தரைப்பாலம் வெள்ளத் தில் மூழ்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் அழுக தொடங்கி விட்டன. இதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மன்னார்குடி அருகே இடையர்எம்பேத்தி கிராமத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு வயலில் புகுந்தது. இதேபோல் கூத்தாநல்லூர் அருகே குனுக்கடியில் உள்ள அன்னமரசனார் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன.

நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். மேலும் நாகூரில் உள்ள பல குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தொடர் மழை காரணமாக குளங்களில் தண்ணீர் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் சில நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மேலக்காடுவெட்டி-கீழக்காடுவெட்டி கிராமங்களுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது.

வடக்கு விஜயநாராயணத்தில் இருந்து இட்டமொழி செல்லும் சாலையில் இருந்த சிறிய பாலம் வெள்ளத்தில் சேதம் அடைந்தது. ஏர்வாடி அருகே உள்ள மலையடிபுதூர் செங்களாகுறிச்சி கால்வாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாக வயல்வெளி, குடியிருப்பு பகுதிகளில் சென்றது.

அதாவது கடந்த 6 நாட்களில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 37 அடி உயர்ந்துள்ளது. இன்னும் 6 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தால் அணை நிரம்பி விடும். மொத்த உயரம் 143 அடி. நேற்று அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 136.27 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வழக்கம் போல் 20 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.13 அடியாக உள்ளது. அணையின் உயரம் 156அடி ஆகும். அணையில் இருந்து 1,659 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மணிமுத்தாறு அணையில் நேற்று முன்தினம் 107.32 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 108.80 அடியாக உயர்ந்தது. அணையின் உயரம் 118 அடி. அணைக்கு 1,609 கனஅடி தண்ணீர் வருகிறது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரியில் ஏற்கனவே பெய்த மழையால் கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் இருகரையையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்தது. மழை மற்றும் நீர்வரத்தால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம், புதுவை மாநிலம் மடுகரை பகுதியை ஒட்டி ஓடும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

படுகை அணை பகுதியில் ஆற்றில் குளித்த சுதாகர் (வயது 19) சுழலில் சிக்கினார். நீண்டநேர போராட்டத்துக்கு பின் அங்கு இருந்த மதகை பிடித்து அவர் உயிர் தப்பினார். அவரை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.

Next Story