மாயமான மீனவர்களை மீட்க கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்
மாயமான மீனவர்களை மீட்க கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி மீனவர்கள் 5- வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் ஆயிரகணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.
இதில் நீரோடி, தூத்தூர், சின்னத்துறை மற்றும் குமரி மேற்கு மாவட்ட மீனவ கிராமங்களில் தான் அதிகமான மீனவர்கள் மாயமாகி இருந்தனர். எனவே அப்பகுதி மீனவ அமைப்புகள் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மாவட்டத்தின் அனைத்து மீனவ கிராமங்களிலும் போராட்டங்கள் நடந்தது.
குழித்துறையில் ரெயில் மறியல், குளச்சல், மணவாளக் குறிச்சியில் சாலை மறியல் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. நேற்று முட்டம், ராஜாக்கமங்கலம் துறை உள்பட பல்வேறு கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போல நேற்று பூத்துறையில் ஏராளமான மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். 2 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் ஊர்வலமாக சென்றனர். இரவிபுத்தன் துறை, தூத்தூர், வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டன் துறை, போன்ற இடங்களிலும் இதுபோன்ற ஊர்வலங்கள் நடந்தது.
இன்றும் 5 வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீனவர் போராட்டம் நீடித்தது. இரவிபுத்தன் துறையில் இன்று மீனவர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை ஊர் மக்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள், மாயமான மீனவர்களின் உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாயமான மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதபடி இருந்தனர்.
இது போல மார்த்தாண்டம் துறை கிராமத்திலும், நீரோடி மற்றும் மார்த்தாண்டம் துறை மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இவர்களும் கண்ணில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திலும் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story