ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் முதல் இடம் பிடிப்பார்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் டி.டி.வி.தினகரன் முதல் இடத்தைப் பிடிப்பார் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 5–ந் தேதியில் இருந்து 12–ந் தேதி வரை 27 பேர் கொண்ட ஆய்வுக்குழுவினர், தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளையும் உள்ளடக்கிய 156 தெருக்களில் 3 ஆயிரத்து 120 வாக்காளர்களை சந்தித்தனர். இதில் ஆண்கள் 49.5 சதவீதம், பெண்கள் 50.5 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்திருந்தால் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் டி.டி.வி.தினகரனுக்கு 38.2 சதவீதம், மருது கணேசுக்கு 27 சதவீதம், மதுசூதனனுக்கு 18.3 சதவீதம் பேரும் வாக்களித்திருப்போம் என கூறினர்.அதேபோன்று தற்போது வாக்களிப்பதாக இருந்தால் டி.டி.வி. தினகரனுக்கு 35.5 சதவீதம், மருது கணேசுக்கு 28.5 சதவீதம், மதுசூதனனுக்கு 21.3 சதவீதம், கலைக்கோட்டுதயத்துக்கு 4.6 சதவீதம், கரு.நாகராஜனுக்கு 1.5 சதவீதம், மற்ற வேட்பாளர்களுக்கு 0.5 சதவீதம், நோட்டாவுக்கு 4.2 சதவீதம் பேர் வாக்களிப்போம் என குறிப்பிட்டனர். 3.9 சதவீதத்தினர், யாருக்கு ஓட்டு என்பதை முடிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.
சின்னத்தை பொருத்தவரையில் டி.டி.வி. தினகரனின் சின்னமான பிரஷர் குக்கர் சின்னம் 91.6 சதவீதம், அ.தி.மு.க.வின் இரட்டை இலை 81.1 சதவீதம், தி.மு.க.வின் உதயசூரியன் 77.8 சதவீதம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தின் சின்னம் மெழுகுவர்த்திகள் 14.2 சதவீதம், பா.ஜ.க.வின் தாமரை 10.4 சதவீதம் பேரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.அ.தி.மு.க. ஆட்சி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதில் மோசம் என்று 73.3 சதவீதமும், சிறப்பு என்று 4.5 சதவீதம் பேரும், சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை என்று 22.1 சதவீதம் பேரும் கருத்து கூறினார்கள். மத்திய பா.ஜ.க., அரசு குறித்து மோசம் என்று 85.6 சதவீதத்தினரும், சிறப்பு என்று 6.2 சதவீதத்தினரும், சொல்லிக்கொள்ளும்படி ஏதுவும் இல்லை என்று 7.9 சதவீதத்தினரும் கருத்து கூறினார்கள்.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதே தொகுதியின் பரவலான கருத்தாக உள்ளது. இருந்தாலும் மோசம் என்று 64.8 சதவீதம், சிறப்பு என்று 18 சதவீதம், சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை என்று 17.2 சதவீதம் பேர் கூறினார்கள்.சமூக அக்கறை உள்ள நடிகர் வரிசையில் நடிகர் விஜய்க்கு முதல் இடம், விஷாலுக்கு 2–வது இடம், ரஜினிகாந்துக்கு 3–வது இடம், கமலுக்கு 4–வது இடம், அஜித்துக்கு 5–வது இடம் கிடைத்துள்ளது.
முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்கப்படும் நடிகர்கள் வரிசையில் விஷாலுக்கு முதல் இடமும், விஜய்க்கு 2–வது இடமும், கமலுக்கு 3–வது இடமும், அஜித்துக்கு 4–வது இடமும், ரஜினிக்கு 5–வது இடமும் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.