ஊதிய உயர்வு: போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 48 மணி நேர போராட்டம் தமிழக அரசின் இதரத்துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். 13–வது ஊ
சென்னை,
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
தமிழக அரசின் இதரத்துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். 13–வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேரம்(2 நாட்கள்) காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன் எடுத்துள்ளன. நேற்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இன்று மாலை நிறைவு பெறுகிறது.
காத்திருப்பு போராட்டம் குறித்து தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் பொருளாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
வருங்கால வைப்புநிதி, எல்.ஐ.சி., கூட்டுறவு நாணய சங்க பிடித்தம் என போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பண பலன்களில் இருந்து ரூ.7 ஆயிரம் கோடியை அரசும், நிர்வாகமும் முறைகேடாக எடுத்து செலவழித்துவிட்டது. அந்த பணத்தை வழங்க வலியுறுத்தி கடந்த மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினோம். பின்னர் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால் தமிழக அரசு இதுவரையில் அதற்கான எந்தவித முயற்சியையும் செய்யவில்லை. எனவே பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதை வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒப்பந்த பலன்களை ஓய்வூதியத்தோடு இணைந்து வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட அம்சங்களுடன் 13–வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.