உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் ஆறுதல்


உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 15 Dec 2017 8:57 AM IST (Updated: 15 Dec 2017 8:57 AM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

நெல்லை,

சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மற்றும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் கிராமத்தில் கொள்ளை கும்பல் தலைவன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரியபாண்டியன் உடலுக்கு  முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்  உள்ளிட்டோரும் உயர் அதிகாரிகளும்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெரிய பாண்டியனின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

கார்த்தி நடித்து அண்மையில் திரைக்கு வந்த தீரன் பட பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டிருந்தார். இதையடுத்து, நடிகர் கார்த்தி நேற்று டுவிட்டரில், பெரிய பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நெல்லை சாலைப்புதூரில் உள்ள பெரியபாண்டியன் இல்லத்திற்கு நேரில் சென்ற கார்த்தி, பெரியபாண்டியனை  இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

Next Story