ஓகி புயல் பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடை அடைப்பு போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஓகி புயல் பாதிப்பையொட்டி குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மாவட்டத்தில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது.- மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானார்கள்.
கடற்கரை கிராமங்களை கலங்க வைத்த ஒகி புயல் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை. சூறாவளியாய் சுழன்றடித்த காற்று தென்னை, ரப்பர், தேக்கு, வாழை மரங்களை வேரோடும், வேரடி மண் ணோடு சாய்த்தது. வரப்புக்கு மேல் வளர்ந்து நின்ற நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின.
ஒகி புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறி விக்க வேண்டும், நாசமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாவட்டம் முழு வதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இப்போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி மற்றும் குமரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் நேற்றிரவு குமரி மேற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசு பஸ்கள் மீது சிலர் கல்வீசினர். இதில் மார்த்தாண்டத்தில் 8, கருங்கலில் 4, களியக்கா விளை 2, திருவட்டார், புதுக் கடை, அருமனை, அஞ்சு கிராமம், இரணியல், சுசீந்திரம், நேசமணி நகர் ஆகிய ஊர்களில் தலா ஒரு பஸ் என மொத்தம் 21 பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. இன்று காலை பெரும் பாலான பஸ்கள் ஓட வில்லை.
முழு அடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்திருந்ததால் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் இன்று மூடிக்கிடந்தன. வர்த்தக நிறுவனங்கள், மால்களும் திறக்கப்படவில்லை. நாகர் கோவிலில் அப்டா காய்கறி மார்க்கெட்டு, கோட்டார் மார்க்கெட்டும் செயல்படவில்லை.
குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, வேர்கிளம்பி, திங்கள் நகர் பகுதிகளில் மார்க்கெட்டுகளும் செயல் படவில்லை. ஒருசில டீக் கடைகள் மட்டும் திறந்திருந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் இன்று நடந்த முழு அடைப்பையொட்டி ஒருசில தனியார் பள்ளிகள் மட்டும் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளித்தது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும் இயங்கின.
Related Tags :
Next Story