அ.தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும், அ.தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது என்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து ஆர்.கே.நகர் தொகுதி 41–வது வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை சிலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
எழில் நகரில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
ஆளுங்கின்ற கட்சி அ.தி.மு.க., அதன் வேட்பாளராக இ.மதுசூதனன் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் வெற்றி பெற்றால் இந்த பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்து வைப்பார். எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு எண்ணிக்கை மட்டும்தான் உயரும். ஆளுங்கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெற்றால்தான் இந்த பகுதியின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று டி.டி.வி.தினகரன் புறப்பட்டு இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் ஆட்சியையும், கட்சியையும் பிடிக்க பார்க்கிறார். இந்த நேரத்தில் சுயேச்சை வேட்பாளராக இந்த தேர்தலில் நின்று அ.தி.மு.க.வின் ஓட்டை பிரித்து, தி.மு.க.வை ஜெயிக்க வைக்க நினைக்கிறார். அ.தி.மு.க.வை கலைக்க, உடைக்க குக்கரை தூக்கி வருகிறார். காலம்காலமாக கொள்ளையடித்த பணத்தை வைத்து தேர்தலில் நிற்கிறார்.குறுக்கு வழியில் எங்களை கவிழ்க்க பார்க்கிறார். விசுவாசமிக்க தொண்டன் உள்ள இயக்கம் அ.தி.மு.க.. மக்கள் பணியாற்றும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.. தி.மு.க. எல்லா கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கிறது. இதனால் அ.தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். மக்களை நம்பித்தான் இந்த தேர்தலை சந்திக்கிறோம். மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள், தேர்தலை முடிவு செய்பவர்கள். கூட்டணி தேர்தலை முடிவு செய்யாது. திறமையான ஒரே வேட்பாளர் மதுசூதனன் தான். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார். அவர்களுடைய ஆட்சி லட்சணங்களை மக்களால் மறக்கமுடியவில்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது வீராணம் தண்ணீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டார். அது தோல்வியில் முடிந்தது. 2001–ம் ஆண்டில் புதிய வீராணம் ஏரி திட்டத்தை கொண்டு வந்து ஜெயலலிதா நிறைவேற்றினார்.
அதேபோல் தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அந்த தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று ஜெயலலிதா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 99 வட்டங்களில் நடந்த தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு அறிவித்தது. இதுதான் தி.மு.க. ஆட்சியின் லட்சணம். இதையெல்லாம் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து, அதை செய்வோம், இதை செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் எதையும் செய்யமாட்டார்
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் டி.டி.வி.தினகரன் புறப்பட்டு இருக்கிறார். அவர் ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இப்போது ஓட்டை பிரியுங்கள். அப்புறம் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், தி.மு.க.வை கடுமையாக எதிர்த்தார்கள். நாங்களும் இப்போது எதிர்த்து வருகிறோம். இது தவறா?.
எம்.ஜி.ஆர்–ஜெயலலிதாவின் ஆன்மாக்களால் நமக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றி சின்னத்தில் இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். அமோக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.