ஆர்.கே.நகர்: பணம் பட்டுவாடா புகாரில் 10 பேர் பிடிபட்டனர்


ஆர்.கே.நகர்:  பணம் பட்டுவாடா புகாரில் 10 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 17 Dec 2017 5:45 AM IST (Updated: 17 Dec 2017 4:19 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததாக 10 பேர் பிடிபட்டனர், பிடிபட்ட ஒருவரை விடுவிக்க கோரி தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை,

காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில், தொகுதி முழுவதும் பணமழை பொழிவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து பறக்கும் படையினரும், போலீசாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதோடு, சோதனையிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 10 பேர் பிடிபட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதிச் சேர்ந்த சாஸ்திரி நகரில் மஸ்தான் என்பவரையும், வினோபா நகரில் யாசர் அராபத், நேதாஜி நகரில் மஸ்தான் அலி என்பவரையும் தி.மு.க. வினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 3 பேரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் என்று கூறப்படுகிறது. இவர்களில் மஸ்தானிடம் இருந்து ரூ.1¼ லட்சமும், யாசர் அராபத், மஸ்தான் அலியிடம் இருந்து தலா ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் காசிமேடு பகுதியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தனபால் என்பவரை தி.மு.க.வினர் பிடித்து காசிமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தனபாலிடம் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ஆர்.கே.நகர் 2-வது தெருவில் பிடிபட்ட மூர்த்தி என்பவரிடம் இருந்து ரூ.10 லட்சமும், புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகரில் பிடிபட்ட வேலு என்பவரிடம் இருந்து ரூ.44 ஆயிரமும் ஆர்.கே.நகர் மன்னப்பன் தெருவில் பிடிபட்ட ஒருவரிடம் இருந்து ரூ.43 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் தவிர மூப்பனார் நகரில் பிடிபட்ட 2 பேரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டது.

கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள பிசியோதெரபி மையத்தில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொருக்குப்பேட்டையில் ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.20 லட்சம் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார் செய்தனர். அத்துடன் ஏராளமான தி.மு.க.வினர் அந்த வீட்டின் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வீட்டுக்கு பூட்டு போடப்பட்டது.

மேலும் அன்பு என்பவரின் வீட்டில் பிரியாணி பொட்டலத்துடன் ரூ.6,000 கொடுப்பதாக தி.மு.க.வினர் புகார் கூறினார்கள். ஆனால் போலீசார் செல்வதற்குள் அவரும், அவரது மனைவியும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதற்கிடையே, சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வேலு (வயது 39) என்பவரை, பணம் பட்டுவாடா செய்ததாக கூறி நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.

அவரை விடுதலை செய்யக்கோரி ஏராளமான பெண்கள் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள் திடீரென்று தீக்குளிக்க முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பாய்ந்து சென்று அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர்.

சில பெண்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த பெட்ரோல் டேங்கர் லாரியின் மீது ஏறி கோஷம் போட்டனர். அப்போது நடந்த கல்வீச்சில் ஒருவர் காயம் அடைந்தார்.

நிலைமை மோசம் அடைந்ததால், போலீசார் லேசாக தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கூறி, வேல்முருகன் என்ற அ.தி.மு.க. நிர்வாகியை தி.மு.க.வினர் சுற்றி வளைத்தனர். அந்த சமயம் அங்கு வந்த டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் வேல்முருகனை தாக்கினார்கள்.

அப்போது அந்த வழியாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிலர் கல்வீசி தாக்கியதில் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்தது.

தண்டையார்பேட்டை, ரெட்டைக்குழி தெருவில், பண பட்டுவாடா புகார் தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், அ.தி.மு.க. தொண்டர் அசோக் (வயது 35) என்பவரின் தலை உடைந்தது. இது தொடர்பாக, அவர், தண்டையார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

ரத்த காயத்துடன் இருந்த அவரை சக தொண்டர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா புகார் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ரா தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கா.விஸ்வநாதன், சென்னை மாவட்ட கலெக்டர் வி.அன்புச்செல்வன், தேர்தல் செலவின பார்வையாளர் முரளிமோகன், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவிண் பி.நாயர், சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்.எம்.ஜெயராம் மற்றும் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர், துணை ஆணையாளர்கள், காவல் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ரா கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா புகார் குறித்து விசாரித்து வருகிறோம். அதில் உண்மை இருக்குமானால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு சோதனை கடுமையாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுடன் விக்ரம் பாத்ரா ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த விக்ரம் பாத்ராவை விமான நிலையத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர்.

விமான நிலைய ஓய்வறையில் சிறப்பு அதிகாரி விக்ரம் பாத்ரா, தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் விக்ரம் பாத்ரா நிருபர்களிடம் கூறுகையில், “ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் என்னை அனுப்பி உள்ளது. தொகுதியில் தேர்தல் சட்டவிதிமுறைகளை முழுமையாக பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்” என்றார்.

Next Story