ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது


ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது
x
தினத்தந்தி 17 Dec 2017 11:45 PM GMT (Updated: 17 Dec 2017 9:26 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை கடந்த மாதம் (நவம்பர்) 21–ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, கடந்த மாதம் 27–ந் தேதி முதல் கடந்த 4–ந் தேதி வரை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 145 வேட்பு மனுக்கள் வந்தன.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5–ந் தேதி நடைபெற்றது. 145 மனுக்களில் 72 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அன்று இரவு அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியில் இருந்து விலக விரும்புபவர்கள் கடந்த 7–ந் தேதியன்று வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.

வேட்பு மனு பரிசீலனை முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 பேரின் மனுவில், 13 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 59 பேர் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான அன்று இரவே வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சின்னம் கிடைத்த மறு நாளில் இருந்தே அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களும், பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் பிரசாரத்தில் குதித்தனர்.

அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கிற இ.மதுசூதனனை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதேபோல், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவு கேட்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வாக்கு சேகரிக்கின்றனர்.

பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்கு சீமானும் பிரசாரம் செய்து வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரனும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். ஏனைய சுயேச்சை வேட்பாளர்களும் ஆர்.கே.நகர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கின்றனர்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. பிரசாரம் முடிந்ததும் தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூரை சேர்ந்த கட்சிக்காரர்கள் வெளியேற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். அந்த வகையில் நாளை மாலை பிரசாரம் முடிந்ததும் வெளியூரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும்.

அதை உறுதி செய்யும் வகையில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பிரசாரம் முடிந்ததும் கண்காணிக்க இருக்கின்றனர்.


Next Story