நடன அழகியை சிகிச்சைக்கு சேர்ப்பதற்காக ஆம்புலன்ஸ் வேனை ஓட்டிவந்த தொழில் அதிபர்
நடன நிகழ்ச்சியின்போது காயமடைந்த நடன அழகியை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ப்பதற்காக தொழில் அதிபர் ஒருவர் ஆம்புலன்ஸ் வேனை ஓட்டிவந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் காபரே நடன நிகழ்ச்சி நடந்தது. அந்த பார் தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமானது. நேற்று முன்தினம் இரவு நடனமாடிய அழகி ஒருவர் கீழே விழுந்து காலில் பலத்த காயமடைந்தார்.
தொழில் அதிபர் தனது சொகுசு காரில் ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆஸ்பத்திரியில் தனது காரை நிறுத்திவிட்டு, ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அங்கு நின்ற ஆம்புலன்ஸ் வேனை தொழில் அதிபர் ஓட்டி வந்துவிட்டார்.
பின்னர் அந்த ஆம்புலன்ஸ் வேனில் நடன அழகியை ஏற்றிச்சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் அவர் தனது காரை எடுத்துவராமல் ஆம்புலன்ஸ் வேனிலேயே அவர் தனது வீட்டிற்கு போய்விட்டார்.
வீட்டிற்கு போய் போதை தெளிந்த பிறகுதான் ஆம்புலன்ஸ் வேனில் தான் வந்தது தொழில் அதிபருக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் தனது டிரைவரிடம் சொல்லி ஆம்புலன்ஸ் வேனை குறிப்பிட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டுவிட்டு வருமாறு தெரிவித்தார்.
டிரைவர் ஆம்புலன்ஸ் வேனை ஆயிரம்விளக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் விடுவதற்கு பதிலாக தேனாம்பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு போய்விட்டார்.
இதற்கிடையில் ஆம்புலன்ஸ் வேனை காணாமல் ஆயிரம்விளக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தேட ஆரம்பித்தார்கள். இதுகுறித்து ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் வேனை தேடினார்கள்.
இதற்கிடையில் தேனாம்பேட்டை ஆஸ்பத்திரியில் விடப்பட்ட ஆம்புலன்ஸ் வேனை அங்குள்ள ஊழியர்கள் இந்த வேன் ஆயிரம்விளக்கு ஆஸ்பத்திரிக்கு சொந்தமான வேன் என்றும், யாரோ தவறுதலாக விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்றும் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வேனை ஒப்படைத்தனர்.
அதன்பிறகுதான் ஆம்புலன்ஸ் வேன் தவறுதலாக எடுத்துச் செல்லப்பட்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆயிரம்விளக்கு போலீசாரும் ஆம்புலன்ஸ் வேனை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.