பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு


பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 Dec 2017 2:07 PM IST (Updated: 18 Dec 2017 2:06 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் , இமாசலபிரதேச வெற்றியை தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி, 

குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரசார் புதிய வியூகங்கள் வகுத்து செயல்பட்டனர்.

இதுவரை 18 மாநிலங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. இன்று இமாச்சலபிரதேச மாநிலத்தில் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாக குறைந்துள்ளது.

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் 19 மாநிலங்களில் 14 மாநிலங்களில் பா.ஜ.க. முதல்  மந்திரிகள் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த 14 மாநிலங்களில் 9 மாநிலங்களில் பா.ஜ.க. தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது. அந்த 9 மாநிலங்கள் விபரம் வருமாறு:-

அருணாசலபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம்,உத்தரகாண்ட்

5 மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சி நடத்தி  வருகிறது.

அசாம் (அசாம் கன பரிஷத், போடடோ லேண்ட் கட்சிகள் ஆதரவு),கோவா (கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டி ராவாடி கோமந்தக் கட்சிகள் ஆதரவு), ஜார்க்கண்ட் (அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் ஆதரவுடன்), மராட்டியம் (சிவசேனா ஆதரவுடன்)
மணிப்பூர் (நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் லோக் ஜனசக்தி ஆதரவுடன்)

பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் 5 மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆட்சி 
நடக்கிறது. ஆந்திரா (தெலுங்கு தேசம் கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு), பீகார் (ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு), காஷ்மீர் (மக்கள் ஜன நாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு), நாகலாந்து (நாகா மக்கள் முன்னணிக்கு ஆதரவு) சிக்கிம் (சிக்கம் ஜன நாயக முன்னணிக்கு ஆதரவு)

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் கர்நாடகா, பஞ்சாப், மேகாலயா, மிசோரம், புதுச்சேரி.

Next Story