சேலம் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து கவர்னர் நேரில் ஆய்வு


சேலம் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து கவர்னர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:30 AM IST (Updated: 19 Dec 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அவர் பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்களை பெற்றார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து, தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதன்படி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று காலை நடைபெற்ற சமூக அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித், சேலம் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

ஓமலூர் அருகே திண்டமங்கலம் ஊராட்சி பனங்காட்டூர் பகுதிக்கு சென்ற கவர்னர், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த கிராமத்தில் சின்ராஜ் என்பவருடைய பசுமை வீட்டையும், அங்கு கட்டப்பட்டிருந்த கழிவறையையும் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், குழந்தைகளுடன் சிறிதுநேரம் சிரித்து பேசி மகிழ்ந்ததோடு அவர்களுக்கு பிஸ்கெட் கொடுத்தார். பதிலுக்கு அங்கன்வாடி குழந்தைகள் கவர்னருக்கு ரோஜாப்பூக்களை கொடுத்து வரவேற்றனர். பிறகு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு மரக்கன்றுகளை நட்டு வைத்து அவர், அங்கிருந்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து திண்டமங்கலம் ஊராட்சி பனங்காட்டூர் கிராமத்தில் பள்ளிக்கூடம் முன்பு கிடந்த குப்பைகளை அள்ளி கவர்னர் தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர், அவர் ஏரிக்காடு கிராமத்திற்கு சென்று, அங்கு மத்திய, மாநில அரசு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மரம் வளர்ப்பு, நாற்றாங்கால் உற்பத்தி, மண்புழு இயற்கை உரம் விற்பனை செய்வது உள்ளிட்ட திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து ஓமலூர் பகுதியில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், அங்கு தூய்மை இந்தியா விழிப்புணர்வு ரதத்தை தொடங்கி வைத்தார். பின்னர், தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து, அங்குள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது, கவர்னரை பார்த்தவுடன் சிலர் அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி கழிப்பறையை அவர் பார்வையிட்டார். மேலும், தூய்மை இந்தியா தொடர்பான துண்டு பிரசுரங்களில் இடம்பெற்றுள்ள வாசகங்களை படிக்குமாறு அங்கிருந்த பயணிகளை கவர்னர் கேட்டுக்கொண்டார். அதன்படி சிலர் வாசகங்களை படித்துக் 3காட்டினர்.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆய்வின்போது, கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். கவர்னர் வருகையையொட்டி சேலம் மாநகரில் புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, 5 ரோடு, பெரியார் பல்கலைக்கழகம், திண்டமங்கலம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story