ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது- முதல்வர் பழனிசாமி


ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது- முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 19 Dec 2017 11:14 AM GMT (Updated: 19 Dec 2017 11:14 AM GMT)

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த 30 ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது. புயலால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி இன்று பிற்பகல் கன்னியாகுமரி வந்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் 2.45 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர்கள் வரவேற்றனர்.

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியபோது எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருக்கு முதல-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அரசின் முதன்மை செயலாளர்கள் ஒகி புயல் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட விருந்தினர் மாளிகையில், ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி; மீனவர்கள், விவசாயிகள் பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒகி புயல் சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை வைத்து உள்ளார். ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவ்சாரணமாக ரூ 4047 கோடி  வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.

பிரதமர் மோடி வருவதையொட்டி குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களான தூத்தூர், இரயுமன்துறை, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன் துறை, நீரோடி உள்பட 8 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அங்குள்ள ஆலய பங்கு தந்தையர்கள், கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்களை கருத்தரங்கு கூடத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதுபோல பயிர் நிலங்கள் சேதமடைந்ததால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்

பின்னர்  பிரதமர் மோடி  ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.

பின்னர்  கன்னியாகுமரியில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது . குமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம், தொலைத்தொடர்பு மற்றும் குளிர்பதன வசதி அமைத்துத்தரவும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.5,255 கோடி நிவாரணம் தேவை. பருவ மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மாவட்டங்களில் நிரந்தர சீரமைப்பு பணிக்காக ரூ.4,047 கோடி நிதி வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

காணாமல்போன கடைசி மீனவரை மீட்கும் வரை தேடும் பணி தொடரும். ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story