அன்னிய செலாவணி வழக்கில் சாட்சிகளை விசாரிக்க கோரி டி.டி.வி.தினகரன் மனு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
அன்னிய செலாவணி வழக்கில் சாட்சிகளை விசாரிக்க கோரி டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.
சென்னை,
இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியின் மூலம் ‘டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்’ நிறுவனத்தில் ரூ.1 கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ததாக டி.டி.வி. தினகரன் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், அன்னிய செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தனர்.
இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தன் தரப்பில் 17 சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென கோரி டி.டி.வி. தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தினகரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் இந்த மனுவை தினகரன் தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரன் தரப்பு வக்கீல் வாதம் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.விமலா, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story